Wednesday 9 September 2009

உதவி வழங்கும் நாடுகளும் அமைப்புக்களும் சிறிலங்காவுக்கு எதிராக ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது: 'த கார்டியன்'


சிறிலங்கா அரசின் நியாயமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கு எதிராக உதவி வழங்கும் நாடுகளும் உதவி அமைப்புக்களும் ஓரே அணியில் திரண்டு நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரித்தானியாவின் புகழ்மிக்கதும் செல்வாக்குமிக்கதுமான நாளேடான 'த கார்டியன்' தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த த கார்டியனின் ஆசிரியர் தலையங்கம் வருமாறு:

கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த போரால் ஏற்பட்ட மனித விளைவுகளைச் சமாளிப்பதற்கான சிறிலங்கா அரசின் முயற்சிகள் வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளிலேயே பெருமளவில் தங்கியுள்ளன.

உயர் அளவான படைத்துறைச் செலவீனங்கள், சுற்றுலாத்துறையின் வருமான வீழ்ச்சி, பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், தேய்ந்துபோன வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஆழிப்பேரலை என்ற பேரில் நிலைமையை மேலும் மோசமாக்க வந்த இயற்கைப் பேரனர்த்தம் அனைத்தும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை கீழ்நிலைக்குத் தள்ளியுள்ளன.

கட்டுமானங்களைத் திருத்துவதற்கான பணிகள், பொருளாதாரத்தின் மீட்டுருவாக்கம், இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் குடியமர்ந்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கான அத்தியாவசிய வசதிகளை வழங்குவது, இயல்பு நிலையை ஏற்படுத்தி அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது ஆகியவற்றை அனைத்துலக உதவிகள் இன்றிச் செய்வதற்கு சிறிலங்கா அரசிடம் வளங்கள் ஏதுமில்லை.

போர் முடிவுக்கு வருவதற்கு நீண்டகாலம் முன்பாகவே, சண்டையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தணிப்பதற்கான தயார் நிலையுடனும் அக்கறையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிறிலங்காவில் இருந்தன.

ஆனால், தமது படைத்துறை நடவடிக்கைகளில் தலையிடாமல் இருங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள் என்று தெரிவித்ததன் மூலம் சிறிலங்கா அதிகாரிகள் அனைத்துலக நிறுவனங்களைச் செயற்படாமல் தமது நீண்ட கரங்களால் கட்டிப்போட்டனர்.

சிறிலங்கா அரசின் இத்தகைய நடத்தை போரில் வெற்றியடைந்த பின்னர் மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தூரதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடைபெறவில்லை.

நாட்டின் வடபகுதியை அணுகுவதற்கு கொழும்பு இப்போதும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக சண்டை நடந்த பகுதிகளுக்கும், இடம்பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் செல்வதற்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பு முகாம்களை தடங்கல்கள் ஏதுமற்ற வகையில் கையாள்வதற்கு அனைத்துலக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடும் நோக்குடன், போர் முடிவடைந்த ஒரு வாரத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கொழும்பு வந்தார்.

பதிலாக, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களின் நிலையை- குறிப்பாக மழை காலத்தில் நிலைமையைச் சமாளிப்பதற்குத் தேவையான பொருட்களை ஐ.நா. நிறுவனங்கள் எடுத்து வருவதற்குக்கூட இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

வாராந்தம் இல்லை எனில் நாளாந்தம் மாற்றப்படும் விதிமுறைகளால் ஏனைய தொண்டு நிறுவனங்கள்கூட தடைகளைச் சந்தித்தன. அரசின் உத்தரவை அடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் சில அலுவலகங்கள் கூட மூடப்பட்டன.

சுயாதீன ஊடகவியலாளர்கள் அந்தப் பகுதிக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மேலாக, முகாம்களில் உள்ள மக்களை வெளியே விடுவதில் உள்ள தாமதம் மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதில் காட்டப்படும் தாமதம் என்பன குறித்து எங்கிருந்து விமர்சனங்கள் எழுந்தாலும் அரசு கடும் சீற்றத்துடன் எதிர்வினையாற்றுகிறது.

சிறிலங்காவின் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், அந்தப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மேற்கொண்ட கீழ்மட்ட அணுகுமுறை புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இப்போது, ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை சிறிலங்கா அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற்றி உள்ளார்கள். முகாம்களில் நிலைமை பருவ மழையை அடுத்து மிக மோசமான துன்பமாகிவிடும் என்று அவர் கருத்துத் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு அரசுக்கு உதவிகள் வேண்டும். ஆனால், அது எப்படிப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை யாரும் கண்காணிக்கக்கூடாது. அதேநேரம் உதவிகளைக் கொடுக்கும் பணியை யார் செய்கிறார்களோ அவர்களும் கொடுமைப்படுத்தப்படுவார்கள்.

இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத, நியாயமற்ற நடத்தைக்கு எதிராக உதவி வழங்கும் நாடுகளும் அமைப்புக்களும் ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அந்த ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA