Wednesday 2 September 2009

" இந்தப் பகை சுழ்ந்த உலகத்தில் ஒரு சமுதாய நோக்கு இல்லாமல் எம்மால் வாழவும் முடியாது, சாகவும் முடியாது.

மொழியும் தேசியமும்

GTV தொலைக்காட்சியின் ஆய்வகத்தில் யூலைமாதம் ஒலிபரப்பான நிகழச்சியின் சாரம்.


"ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்கமுடியாது... இரண்டாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக மொழிக்கு விழா எடுக்கும், மொழிக்கு சங்கம் அமைக்கும், மொழிக்காகத் தீக்குளிக்கும் தமிழ் மக்களின் தேசியத்தில் மொழியே அதன் உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருப்பதில் வியப்பில்லை... தமிழ் அயலிலே வளருகின்றாள் என முடிக்கின்றார் கவிஞர்... இந்தத் தமிழ் அயலை "தமிழ்கூறும் நல்லுலகம் " எனக் கூறுகின்றார் தொல்காப்பியனார்... எமக்கு எம் மொழியைப்போல் வேறொன்றும் இல்லை. எம்மை நாம் அறிவதற்கான மார்க்கமே எமது மொழி. அதுவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் செய்யும் வாழ்விற்கு ஆதாரம். அதுவே எம் உரிமைச் செம் பயிருக்கு வேர். "
ஒரு தேசம் என்னும்போது அதற்கு ஒரு பெயர், பிரதேசம், இதிகாசங்கள், வரலாற்று ஞாபகங்கள், கலாசாரம், பொருளாதாரம், கடமைகளும் உரிமைகளும் எனப் பட்டியல் இடலாம். இவற்றை தாங்கி நிற்க, பகிர்ந்துகொள்ள மொழி உதவுகிறது.

ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்கமுடியாது என்ற கருத்தை 1772 இல் யேர்மனிய தத்துவாசிரியரான ஜோஹன் ஹொற்பிறைட் ஹேடர் (Johann Gottfried Herder ) முன்வைத்தார்.

எம் முந்தையரின் அரிய சாதனைகளை வெளிப்படுத்தும் வரலாற்றையும் கவிதையையும் மொழியின் ஊடாகவே கொண்டாடுகின்றோம் என்கிறார் இவர். இவரின் சகபாடியான வில்ஹெலம் வொன் ஹம்போல்ட் ( Wilhelm von Humboldt ) என்பார் மொழி ஒரு தேசத்தின் ஆன்மீக வெளிமூச்சு, அதன் மொழியே அதன் ஆத்மா அந்த ஆத்மாவே அதன் மொழி என்கிறார். இவர்களது சமகாலத்தவரான ஜோஹன் கொற்லிப் பிசற் ( Johann Gottlieb Fichte )

' மனிதர்கள் மொழியால் வடிவமைக்கப்படுதல் மனிதர்களால் மொழி வடிவமைக்கப்படுவதிலும் மிகவும் அதிகமாகும் "
“Men are formed by language far more than language is formed by men”
என்கிறார்.
இவர்கள் யாவரும் யேர்மன் மொழி மற்றைய மொழிகளைவிட உயர்வானது என்ற கருத்துருவாக்கத்தின் தளத்தில் நின்று மொழியை தேசியத்துடன் இணைத்தனர்.

அதன் வழி ஜேர்மன் தேசமும் அதன் மொழியும் மேலானது என்ற வெறி இவர்களிடம் காணப்பட்டது.

இதில் பிரன்சுக்காரரும் சளைத்தவர்ககள் அல்லர். இக்காலத்தில் Maurras Limoge போன்ற தத்துவாசிரியர்கள் பிரான்சிய மொழியே ஜரோப்பிய கலாசாரத்தின் வனப்புக்களை வெளிப்படுத்துகிறது என்றனர்.

மொழித் தூய்மையை வற்புறுத்திய இவர்களது கருத்தாக்கம் நின்று நிலைக்கவில்லை என்பது வரலாறு. இந்த வகையான தூய்மைவாதிகளின் கருத்துக்கள் தேசிய வாதத்தின் அசிங்கமான பக்கங்களாகப் பார்க்கப்படுகிறது.

இன்று அரசு என்ற அங்கீகாரத்துடன் 192 நாடுகள் மட்டில் ஜக்கிய நாடுகள் தாபனத்தில் அங்கம் வகித்தபோதும் இந்த நாடுகளில் 3000 க்கும் அதிகமான தேசிய இனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேசிய இனங்கள் யாவும் தமக்கான தனித்துவமான மொழியைக் கொண்டிருக்கவில்லை. அந்தச் சமயங்களில் அவர்களது தேசியத்தின் வெளிப்பாடாக மொழி தவிர்ந்த வேறு பண்புகள் முதன்மை பெறுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக மொழிக்கு விழா எடுக்கும், மொழிக்கு சங்கம் அமைக்கும், மொழிக்காகத் தீக்குளிக்கும் தமிழ் மக்களின் தேசியத்தில் மொழியே அதன் உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருப்பதில் வியப்பில்லை.

பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலேயிருந்து வைகையேட்டிலே தவழ்ந்தபேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேன
மருப்பிலே பயின்றபாவை மருங்கிலே வளருகின்றாள்

தமிழ் அயலிலே வளருகின்றாள் என முடிக்கின்றார் கவிஞர்.

அதாவது தமிழின் பெருமை அதன் தொன்மையில் மட்டுமல்ல அதற்கு மேலாக அதன் தொடர்ச்சியிலேயே தங்கியுள்ளது. இந்தத் தமிழ் அயலை "தமிழ்கூறும் நல்லுலகம் " எனக் கூறுகின்றார் தொல்காப்பியனார்.

நீண்ட தொடர்ச்சியான வரலாற்றில் தமிழின் பெருமையை பலரும் போற்றியபோதும் அது தமிழ் வெறியாக இருக்கவில்லை.

' நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே" என்ற நக்கீரனும்,

' வையகவரைப்பில் தமிழகம் கேட்ப" பாடிய சங்கப் புலவனும்,

' என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்ற திருமூலதேவனாரும்,

' மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ ,உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்" எனப் புறப்பட்ட கலகக்காரனான கம்பனும்,

' இமிழ் மடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய இது கருதினையாயின்" எனச் சிலம்பு இசைத்த இளங்கோ அடிகளாரும்,

' தமிழோடு இசைபாடல் மறந்தறியாத" நாவுக்கரசரும்,

' தென்னவன் சேரன், சோழன், திருப்புயங்கள் வர" கூவ குயிலை அழைத்த மாணிக்கவாசகரும்

'அன்றைக்கன்றென்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசன்" எனக் கரையும் நம்மாழ்வாரும்,

'கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதிர்த்து எழுந்தே ஓன்று பல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமே " என வியக்கும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும்,

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் " என உறுதிகொள்ளும் பாரதியும்
தமிழை:

சத்தியத்தின், ஞாயத்தின், அன்பின், வீரத்தின், பக்தியின் வெளிப்பாடாகத் தமிழ் செய்த வாழ்வின் காட்சிக் கோலங்களையே காட்டிநிற்கின்றனர்.

இந்தித் திணிப்பும், சிங்களத் திணிப்பும் ஏற்பட்டபோதே பாரதிதாசன்களும், காசியானந்தன்களும் கவிவெறிகொண்டனர்.

சிங்களமொழித் திணிப்பு இடம் பெற்றபோது சிங்கள பாராளுமன்றத்தில் 1955 இல் பேசிய கலாநிதி என்.எம். பெரேரா இந்த அடக்குமுறைகளால் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்கள் ஒரு மாநிலமாகப் பிரிந்து இந்தியாவுடன் இணைந்து கொள்வர் என எச்சரித்திருந்தார்.



பாரத நாட்டைப் பல தேசங்களின் கூட்டாகக் கண்ட பாரதி சிங்களதேசத்திற்கும் பாலம் அமைப்போம் என்றான்.


இன்று தமிழ் ஈழத்தில் தமிழ் மக்களின் தேசியத்தை வென்று எடுப்பதற்கான ஆயுதப்போராட்டம் தோற்கடிகப்பட்டுள்ளது. இதில் ஒரு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.



எஞ்சியோர் வதை முகாங்களில் நாளுநாள் சாகடிக்கப்படுகின்றனர்.


சகிப்புத் தன்மை அற்ற சிங்களப் பெரும்பான்மைத் தேசியத்தின் இந்த நிலையை உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான அல்பேட் அயன்ஸ்ரயனின் வார்தைகளில் கூறுவது பொருத்தமாகும்.

" இந்தப் பகை சுழ்ந்த உலகத்தில் ஒரு சமுதாய நோக்கு இல்லாமல் எம்மால் வாழவும் முடியாது, சாகவும் முடியாது. இந்தச் சமுதாய நோக்கை தேசியம் என்று அழைக்கலாம். அது என்னவாகிலும் அதன் நோக்கம் அதிகாரம் அல்ல. அதன் நோக்கம் தன்மானமும் நல்வாழ்வுமே. சகிப்புத் தன்மை இன்றியும், குறுகிய மனப்பான்மை கொண்டும், அத்தோடு வன்முறையை கையாளுபவர்களுமான மக்களிடையே நாம் வாழாது இருக்க முடியுமானால் உலகு தழுவிய மனிதத்திற்காக எல்லாத் தேசியங்களையும் தூக்கி வீசுவதில் நான் முன்னிற்பேன். ஜேர்மன் அரசில் யூதர்களாகிய நாம் தகமை வாய்ந்த பிரசைகளாக இருக்கமுடியாது என்ற ஆட்சேபனை அரசு என்பதன் இயல்பு பற்றிய தவறான புரிதலால் ஏற்படுவதாகும். தேசிய பெரும்பான்மையினரிடம் சகிப்புத்தன்மை இன்மையால் அது ஏற்படுகிறது. அந்த சகித்துக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் நாங்கள் எம்மை ஒரு மக்கள் என்று கூறினாலும்சரி கூறாவிட்டாலும்சரி நாம் ஒருபோதும் பாதுகாப்பாக
இருக்கமுடியாது "

" a communal purpose without which we can neither live nor die in this hostile world can always be called by that ugly word (nationalism). In any case it is a nationalism whose aim is not power but dignity and health. If we did not have to live among intolerant, narrow-minded, and violent people, I should be the first to throw over all nationalism in favor of universal humanity. The objection that we Jews cannot be proper citizens of the German state, for example, if we want to be a 'nation' is based on a misunderstanding of the nature of the state which springs from the intolerance of national majorities. Against that intolerance we shall never be safe, whether we call ourselves a people (or nation) or not..."

Sivakumaran Statute in Urumpirai, 2004

என அவர் கூறினார். தமிழ் மக்கள் தம் மொழிக்கு விழா எடுப்பதைக்கூட சகித்துக் கொள்ளாத சிங்களத்தேசியம் 1974 இல் சிவகுமாரனை உருவாக்கிய வரலாறு தமிழ்த் தேசியத்தில் மொழியின் ஆழத்தைப் புலப்படுத்தப் போதுமானது. யாழ்நூலகம் மீதான தீ வைப்பும் மொழி தாங்கி நிற்கும் வரலாற்று ஞாபகங்ளை அழிக்கும் முயற்சியே.

ஆக்கிரமிப்புக்களாலும், பிறமொழி ஆதிக்கத்தாலும் எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன. அழிக்கப்பட்டு வருகின்றன.

" ஒரு சமுதாயத்தின் கடைசி அவகேடு, அதிகாரம் பெருமை இவற்றை இழப்பதன்று. பொதுநல வாழ்விற்கு அவசியமான சுதந்திரத்தை இழப்பதுகூட அன்று. தனது நாட்டில் அன்னியன் புகை படர்வது, அல்லது சுதேசிகள் பதமிழந்து அனாதைகளாகி அலறி ஓடுவது, புதியவர்கள் ஆதிக்கம் செலுத்துவது ஆகிய அலங்கோலக் காட்சிகள் மிகக் கொடுமையானவையே. இவ்வாறு நாடு இழப்பதுகூட ஒரு பொருட்டன்று. தாய்மொழிச் செல்வம் மெல்ல மெல்க அழிவதே இறுதியான பெருந்துயர நாடகமாகும். ......................... தாய்மொழியை இழந்த ஒரு சமுதாயம் தனது பண்டைத் தொடர்பற்று அடிமைப்புத்தி பிடித்துக் கெடுகிறது "
என்கிறார் பறக்கும்விதியின் ஆசிரியரான ஸ்கொட்லாந்தைச் சார்ந்த வில்லியம் சாப். இவர் கூறும் அவலமான, அலங்கோலமான நிலையில் உள்ள தமிழீழ மக்களின் துயரங்கள் கூட்டான வேதனையையும் அதன் ஊடாக கூட்டான கடமைகளையும் கூட்டான முயற்சிகளையும் வேண்டிநிற்கிறது.

பறக்கும்விதியின் ஆசிரியர் கூறிய அவலத்தை ஸ்கொட்லாந்து மக்கள் அனுபவிக்கவில்லை. ஆனால் அவர்கள் மொழி இன்று அங்கு எல்லோராலும் பேசப்படுவதில்லை. அவர்களின் தேசியக் கவி எனப் போற்றப்படும் றொபேட் பேன்ஸ்கூட (Robert Burns ) பெரும்பான்மையான படைப்புக்களை ஆங்கிலத்திலேயே படைத்துள்ளார்.

இதே கதிதான் அயர்லாந்து மொழிக்கும். அயர்லாந்தின் தேசியக் கவிஞர்களான தொமஸ் மூர் ( Thomas Moore ) ஜேட்ஸ் (Yeats ) என்போரின் ஆக்கங்களும் ஆங்கில மொழியில்தான்.

இன்று அயர்லாந்தில் ஹெல்ரிக் மொழியே முதல் உத்தியோக மொழியாக இருந்தபோதும் அதனைப் பேசுவோர் சொற்ப வீதத்தினரே. ஒரு காலத்தில் அயர்லாந்தின் ஒரு கரையில் இருந்து மற்றக்கரை மட்டும் ஹெல்ரிக் மொழியையே பேசினார்கள். ஆனால் வைக்கிங்ஸ், நோமன்ஸ். ஆங்கிலேயர் என இடம் பெற்ற தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கள், 1840 இல் இடம் பெற்ற கொடிய உருளைக்கிழங்குப் பஞ்சம், தொடர்ந்து பெருமளவில் நாட்டைவிட்டு அமெரிக்கா அவுஸ்திரேலியா எனக் குடியேறியமை இவர்கள் மொழியின் தேய்விற்கு வித்திட்டது என்பர். அயர்லாந்தின் முதல் பிரதமரும் ஜனாதிபதியுமான டி வலறா ,

" எமக்கு எமது மொழிக்கு ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை. இது எங்களுடையது. எங்களுக்கு மாத்திரமே. இது வெறும் குறியீட்டிற்கு அப்பாற்பட்டது. இது எமது தேசியத்தின் மிக முக்கியமான உறுப்பாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக எமது மூதாதையினரின் சிந்தனைகளில் இது செப்பனிடப்பட்டது.

அவர்களின் சிந்தனைகளும் அனுபவங்களும் இந்த மொழியில்தான் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அயர்லாந்தில் இன்று பேசப்படும் மொழி எமது மூதாதையர் பேசிய மொழியே. மூவாயிரம் ஆண்டுகால எமது வரலாற்றின் வாகனமாக விளங்கும் இந்த மொழி மதிப்தூடுகளுக்கு அப்பாற்பட்டதாகும். ஆழமான அனுபவ ஞானங்களையும், வாழ்க்கைபற்றிய பார்வையில் கிறீஸ்தவ ஆத்மானுபவங்களையும் சுமந்து நிற்கும் ஒரு தத்துவத்தின் வெளிப்பாடே எமது மொழி. இதனை விட்டுப் பிரிவது என்பது எம்மில் இருந்து ஒரு பெரும் பாகத்தை விட்டுப் பிரிவது போலாகும். மரத்தில் இருந்து அதன் ஆணிவேரை தகர்ப்பதற்குச் சமனாகும். மொழியின் இழப்புடன் பாதித் தேசத்திற்குமேல் நாம் என்றுமே கட்டி எழுப்பக் கனவு காண முடியாது "

" For many the pursuit of the material life is a necessity. Man to express himself fully and to make the best use of the talents God has given him, needs a certain minimum of comfort and wealth. A section of our people have not yet this minimum. They rightly strive to secure it and it must be our aim and the aim of all who are just and wise to assist in that effort. But many have got more than is required and are free, if they choose, to devote themselves more completely to cultivating the things of the mind and, in particular, those that make us out as a distinct nation.

The first of these latter is the national language. It is for us what no other language can be. It is our very own. It is more than a symbol, it is an essential part of our nationhood. It has been moulded by the thought of a hundred generations of our forebearers. In it is stored the accumulated experience of a people - our people who, even before Christianity was brought to them, were already cultured and living in a well ordered society.

The Irish language spoken in Ireland today is the direct descendant without break of the language our ancestors spoke in those far off days. A vessel for three thousand years of our history, the language is for us precious beyond measure. As the bearer to us of a philosophy, of an outlook on life deeply Christian and rich in practical wisdom, the language today is worth far too much to dream of letting it go.

To part with it would be to abandon a great part of ourselves, to loose the key to our past, to cut away the roots from the tree. With the language gone we could never again aspire to being more than half a nation."
என்றார்.

அவர்காலத்திலேயே ஹேலிக் மொழி அவர்கள் அரசியல் யாப்பிலும் அரச நிர்வாகத்திலும் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றபோதும் அவை ஏட்டில் மட்டுமே நின்று விட்ட பரிதாப நிலை அந்த மொழிக்கு. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் தேய்ந்தபோதும் தமிழ் மக்கள் ஏதிலிகளாகியபோதும் அவர்கள் தேசியத்தில் மொழியின் ஆற்றல் அற்புதமானதாகும்.

ஸ்கொட்லாந்து அயர்லாந்து மக்களின் கதை இதுவாகின் நாட்டோடு தொலைத்த மொழியையும் மீட்டெடுத்த வரலாறு யூதமக்களின் கதையாகும்.

எகிப்தியர், பாரசீகர், உரோமர், ஒட்டமன், ஆங்கிலேயர் எனப் பலராலும் அடிமைப்படுத்தப்பட்டு 2000 ஆண்டுகளாகப் பரதேசிகளாக வாழந்த யூதமக்கள், நச்சுவாயு கிடங்குகளிலும், வதை முகாங்களிலும் பலிபோன யூதமக்கள் , உலக வழக்கொழிந்து இருந்த தம் மொழியை மீட்டு இஸ்றேல் நாட்டின் மொழியாக அரியாசனம் ஏற்றிய வரலாறு அற்புதமானது.

இடையறாத மனித முயற்சியின் வெற்றி வரலாறு அது.

ஆயிரம் ஆண்டுகாலமாக சமய அனுட்டானங்களில் மாத்திரம் சிலரால் பேணப்பட்ட ஹீபுறு மொழியை 1858 க்கும் 1922 க்கும் இடையே வாழ்ந்த எலியேசர் பேன் யெகுடா ( Eliezer Ben Yehuda ) என்னும் தனிமனிதன் தலமையில் மீட்டெடுத்தனர்.

இவரின் மகனே 1700 ஆண்டுகளின் பின்னர் முதன்முதல் ஹீபுறு மொழியில் தன் முதல் வார்த்தையை உச்சரித்தார் என்று கூறுவார்கள். தியோடர் ஹேல் யூததேசியத்தின் தந்தை எனின் அந்த தேசியத்தின் மொழிப் பண்பிற்கு Eliezer Ben Yehuda வை தந்தை என்பர்.

இன்று பல மொழிகள் எம் கண்முன்னே அழிந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். யேசநாதர் பேசிய அராமிக் மொழி இன்று வழக்கில் இல்லை. எழுத்தையும் நாகரிகத்தையும், நகரத்தையும் தந்த பபிலோனிய நாகரிகம் கண்ட மொழிகள் இன்று இல்லை. இலக்கிய தத்துவ வழம்கொண்ட சமஸ்கிருதம் லத்தீன் என்பன பேச்சு வழக்கில் இல்லை. இலங்கைத் தீவுவரை கரைதட்டிய பிராகிருத மொழியும் இன்றில்லை.

ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோரால் பேசப்படும் மொழிகளாக 200 மொழிகளே இன்று உள்ளன என்பர். 100 மில்லியனுக்கு மேற்பட்டோரால் பேசப்படும் மொழிகளாக 12 மொழிகள் உள்ளன. உலகவர்த்தக சாம்ராச்சியம், உலகமயமாக்கல் என்னும் சுஸ்ரீறாவளியில் பல மொழிகள் இரையாகும் என எதிர்வு கூறப்படுகிறது.

இத்தகையதொரு பின்புலத்தில் தமிழ்த் தேசியத்தில் தமிழ் மொழியின் பங்கு எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை ஊகிக்கலாம். மொழிதழுவிய தேசியத்திற்கு ஒரு நாடு வேண்டும். அந்தநாடு தமிழ்கூறும் நல்உலகு. தமிழ்த்தேசியம் இந்தத் தமிழ்கூறும் நல் உலகைத் தழுவி உள்வாங்கப்படும்போதே இது சாத்தியமாகும்.

மொழியே இதற்கான பிணைப்பாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக எம், முந்தையர் உள்ளங்களிலும் அவர்தம் சிந்தனைகளிலும் செப்பனிடப்பட்ட மொழியே தமிழ்.

முள்ளிவாயக்காலில் சிங்கள அரசின் படைகளுடன் கைகோத்த பிராந்திய வல்லரசு, சீன வல்லரசு, அமெரிக்க வல்லரசு எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து தமிழ் மக்களை அகதிகளாக்கி வவனியா மனிக்பாமில் வதைக்கின்றபோது கேட்கும் அவலக்குரலில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அகதிகளான பாரி மகளிரின்

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்றெறி முரசர் எம் குன்றம் கொண்டார்
யாம் எந்தையும் இலமே

என்ற குரலையும் கேட்க தமிழ் மொழியே வழி சமைக்கின்றது. இந்தச் சோகம் காப்பிய பரிமாணம் பெற்று எம்மை வதைக்கவும் அந்த வதையிலும் உறுதிபெற தமிழ் சுமந்து நிற்கும் எம் முன்னோர் வரலாறும் அவர்தம் அனுபவங்களும் எமக்கு ஒத்தணமாகிறது.

அதில் ஒரு சக்தி பிறக்கிறது. இந்த சக்தி தொடர்ச்சியான ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு.

கண்ணதாசனின் பாடல்களில் பாரதியை, கம்பனை, வள்ளுவனை தரிசிக்கின்றோம். பாரதியில் கம்பனின், ஆழ்வார்களின் குரல்களைக் கேட்கின்றோம். கம்பனில் நம்ஆழ்வாரைத் தரிசிக்கின்றோம். நெஞ்சை அள்ளும் சிலம்பில், வள்ளுவனின் சொல் ஓவியங்களையும் சங்கப் புலவர்களின் மொழி ஆழுமையையும் காண்கிறோம்.

வள்ளுவனில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனை, எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்ற ஒவையை, அவனின் காமத்துப் பாலில் சங்க அகத்திணையின் சாரத்தை ரசிக்கின்றோம்.

இந்த பழமையான இலக்கியங்களுக்கு ஊடாக நாம் செய்யும் யாத்திரையில் எம்மையும் கண்டு அறிகின்றோம்.

நாம் இந்த கண்டு பிடிப்பை கிரேக்க,ரோம, கிறீஸ்தவ அனுபவங்களுக்கு ஊடாகச் செய்யவில்லை.

அந்தச் சிந்தனைகள் பெரிதாக இருக்கலாம் இல்லாதும் விடலாம். ஆயின் டஷ வலறா கூறியதுபோல் எமக்கு எம் மொழியைப்போல் வேறொன்றும் இல்லை. எம்மை நாம் அறிவதற்கான மார்க்கமே எமது மொழி.

அதுவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் செய்யும் வாழ்விற்கு ஆதாரம். அதுவே எம் உரிமைச் செம் பயிருக்கு வேர்.

ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

தமிழினத்தின் இன்னொரு வரலாறு: வதைமுகாம் வாழ்வு

தமிழ்மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் கொலைப்படலங்களும் கொடூரங்களும் ஆதாரத்துடன் வெளியாகிவரும் தற்போதைய நிலையில் இன்னமும் சிங்களச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு வதைக்கப்படும் தமிழ் உறவுகள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை அந்தச் சிறைகளிலிருநு்து வெளியே கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை அத்தியாவசியமாகியிருக்கிறது.

கடந்த மே மாத நடுப்பகுதியில் - போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய காலப்பகுதியில் - சிறிலங்கா அரச படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் கொடூரம் தாங்காமல் நிராயுதபாணிகளாகச் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்காப் படைகளால் நூற்றுக்கணக்கான இரகசிய வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு விசாரணைகள் என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

முகாம்களிலிருந்து தினமும் 20 பேர் காணாமல் போகிறார்கள், வெள்ளைவானில் வந்த அடையாள தெரியாத நபர்களால் முகாமிலுள்ளவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்ற செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில், அந்த காணாமல் போதல்களின் பின்னணியில் ' சனல்-4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில் காண்பிக்கப்பட்டது போன்ற சம்பவங்களே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்று சிறிலங்காவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பு சார்ந்த - பெயர்குறிப்பிட விரும்பாத - அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

155போரின் போது அல்லது போரின் கொடூரத்தால் இரண்டு கைகளையும் இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், கண்பார்வையற்றவர்கள் என எல்லோரையும் விசாரணைகள் என்ற பெயரில் அழைத்துச் செல்லும் சிறிலங்காப் படைகள் அவர்களை புகைப்படம் எடுத்தபின்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிவருவதாகவும் ஏனையவர்களைக் காட்டித்தரும்படி அவர்களை வதைப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவயங்களை இழந்து அன்றாட தேவைகளுக்கே தங்கியிருக்கக்கூடிய இளையவர்கள் இனி ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்று சிறிலங்காப் படைகள் எந்த அடிப்படையில் நம்பி அவர்களை இன்னமும் தடுத்துவைத்து சித்திரவதை செய்துவருகிறார்கள் என்று தெரியவில்லை என்று அங்கிருந்து குரல்தந்த ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.


147பல்லாயிரக்கணக்கில் சரணடைந்த மக்களை கூட்டம் கூட்டமாக அடைத்துவைத்துள்ள சிறிலங்காப் படைகள், அவர்கள் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்து அவர்களின் கழுத்தில் இலக்கங்களை மாட்டிய பின்னர் அவர்களை புலனாய்வுப்பிரவினரிடம் அனுப்பிவைக்கின்றனர். ஒட்டுக்குழுக்களிடமிருந்தும் அரச பிரிவிலிருந்தும் புலனாய்வுப்பிரிவினர் என்ற பெயரில் வருபவர்கள் விசாரணை என்ற பெயரில் அவர்களை தனித்தனியே வைத்து துருவுவதாகவும் -

இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகையில் ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி புலனாய்வுப்பிரிவிலிருந்து வரும் ஆண்கள், சரணடைந்த பெண்களை தமது இஷ்டத்துக்கு சித்திரவதைகளை மேற்கொண்டும் தமது வக்கிரங்களை அவர்களிடம் திணிப்பதாகவும் -

ஆண்கள் படுபயங்கரமான சித்திரவதைகளுக்கு முகம்கொடுப்பதாகவும் இந்த அவலக்குரல்கள் வெளியில் கேட்காதவண்ணம் இந்த வதைமுகாம்கள் வன்னிக்காட்டுப் பகுதிகளுக்குள் உள்ள வீடுகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

37இவ்வாறு சித்திரவதைகளை மேற்கொள்பவர்கள் கூட்டம் நிரந்தரமாக வன்னிப்பகுதியில் முகாமிட்டிருப்பதாகவும் ஒவ்வொரு கூட்டமாக வந்து விசாரணைகளை மேற்கொள்பவர்கள் தமது நேரம் முடிந்தபின்னர் வெளியேற மற்றைய கூட்டத்தினர் வந்து விசாரணைகளை மேற்கொள்வர் என்றும், இவர்கள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் முகாமிட்டிருப்பதாகவும் இவர்களுக்குரிய உணவை இராணுவம் விநியோகிப்பதாகவும், மாலைவேளைகளில் அங்குள்ள திறந்த வெளிகளில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டுவிட்டு இரவுவேளைகளில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


இவ்வாறு விசாரணைகள் என்ற பெயரில் கொண்டுசெல்லப்படுபவர்கள் அப்பாவிகளாக இனம்காணப்பட்டால் அவர்களை திரும்பவும் உயிருடன் வெளியே அனுப்பினால் தமது வதைமுகாம்கள் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்களை அங்கேயே கொலை செய்துவிடுவதாகவும் கொண்டுசெல்லப்படுபவர்களிடம் ஏதாவது தகவல்கள் பெறப்பட்டால் அவர்கள் ஏனைய சிறப்பு வதைமுகாம்களுக்கு மாற்றப்பட்டு அங்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு - தேவை ஏற்பட்டால் - அவர்கள் வவுனியா மற்றும் தென்பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்றும் தெரியவருகிறது.

இவ்வாறு வேறு இடங்களுக்கு மாற்றப்படுபவர்களில் சிலர் தென் பகுதியில் உள்ள பூசா, வெலிக்கடை போன்ற சிறைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள சிறப்புத் தடைமுகாம்களில் வைத்து கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் உயர்மட்டத்தினரால் விசாரணை செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதுடன் -

கொழும்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை இவர்களின் முன்கொண்டுவந்து நிறுத்தி விடுதலைப்புலிகளைக் காட்டித்தரும்படி கூறி சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஆங்காங்கு கொண்டுசெல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் விவரங்கள் ஆகியவை எவருக்கும் தெரியாது என்றும் இவர்கள் தொடர்பான பதிவுகள் வெளியில் தெரிவிக்கப்படாதவையாக உள்ளதாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களோ சர்வதேச செஞ்சிலுவைக் குழுவோ அல்லது வேறு விசாரணை குழுக்கள், ஊடகங்கள் ஆகியவை ஆதாரங்களுடன் நேரில் வந்து கேட்கும் முன்னர் கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் தெரியாமல் வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றுவிடுவது அல்லது விசாரணைகளை முடித்துவிட்டு கொலைசெய்துவிடுவது என்பதில் படைத்தரப்பு வேகமாக செயற்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

215இது தொடர்பாக அங்கிருந்து மேலும் தெரிவிக்கப்படுகையில் - "சித்திரவதையின் அகோரம் தாங்காமல் இரத்தத்துடன் சேர்ந்து சில தகவல்களையும் வெளியே கொட்டுபவர்கள் வவுனியா முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வேறு ஆட்களைக் காட்டித்தருமாறு பணிக்கப்படுகிறார்கள். முகாமிலிருந்து பணம் கொடுத்து வெளியே வந்தவர்கள் தொடர்பான விவரங்களை அறிவதற்கும் இவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடல்வழியாக இந்தியா சென்றவர்கள் கொழும்பின் ஊடாக வெளிநாடு சென்றவர்கள் என்று முக்கியபுள்ளிகள் தப்பிவிட்டார்கள் என்ற பயங்கர சீற்றத்தில் உள்ள படைத்தரப்பு தனது ஆத்திரத்தை அங்குள்ள மக்களின் மீதும் சரணடைந்த போராளிகள் மீதும் காண்பிக்கிறது".


"முகாம்களிலுள்ள அனைத்து மக்களையும் சரணடைந்த போராளிகளையும் தற்போதும் செயற்பாட்டு நிலையிலுள்ள விடுதலைப்புலிகளாகவே பார்க்கும் சிங்களப் படைகள், வயது வேறுபாடின்றி அவர்களை வதைபுரிந்து வருகின்றன. அவர்களில் எத்தனைபேரை தனது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தனக்குச் சார்பாகப் பயன்படுத்திவிட்டு அவர்களையும் பின்னர் வெளியில் விட்டுவிடாமல் - தனது இரகசிய சித்திரவதைப் படலங்களை மறைக்கும்வகையில் - கொன்றுதள்ளலாம் என்ற விடயத்தில் இராணுவத்தினர் கவனமாகச் செயற்படுகின்றனர்.

"சரணடைந்தவர்களைப் பார்வையிடவேண்டும் என்று வரும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினருக்குக் காண்பிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை மக்களை விசேட முகாமில்வைத்து அதனை விளம்பர முகாமாக இராணுவம் பராமரித்துவருகிறது. ஆனால் உள்ளே கொடூரங்களை மட்டுமே நாளாந்தம் முகம்கொடுத்துவரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை வெளியே யாருக்கும் தெரியாது" - என்று அவர் கூறிமுடித்தார்.

இதுதான் தாயகத்தில் உறவுகள் முகம்கொடுத்துவரும் இன்றைய நிலை.

இரண்டு கைகளும் இல்லாதவர்களும் இனிவரும் காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என்று சர்வதேசத்தை நம்பவைக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டிருக்க அதனை செவிமடுத்து சிறிலங்காவுக்கு இன்னமும் நிதி உதவி வழங்கும் வகையில் பன்னாட்டுச் சமூகம் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையே காணப்படுகிறது.

போர் நடைபெற்று முடிந்த நிலையில் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஜனநாயக வழியிலேயே தனது அடுத்த கட்டப் போராட்டத்தை நகர்த்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாகரிகமற்ற முறையில் 'யுத்த தர்மம்', 'மனித உரிமைகள்' என்று சர்வதேசம் வார்த்தைக்கு வார்த்தை அறிக்கைக்கு முன்மொழியும் விடயங்களை அடியோடு மீறி தனது அடாவடித்தனத்தையும் அக்கிரமத்தையும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசம் இனிமேலும் தண்டிக்காதா?

யுத்தக் கைதிகளை எவ்வாறு பராமரிக்கவேண்டும் என்பது தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று. அப்படியிருக்கையில் இன்றையநிலையில் சிறிலங்கா அரசு கடைப்பிடிக்கும் அத்துமீறிய செயலையும் எதேட்சதிகாரப்போக்கையும் சர்வதேசம் இன்னமும் பொறுத்துப் பொறுத்து இருப்பது எதற்காக? சிங்களத்தின் கொடும் கரங்களில் அகப்பட்டுள்ள தமிழினம் அந்த ஆக்கிரமிப்பாளர்களின் கொலைவாளால் அறுக்கப்பட்டு தனது மண்ணில் முற்றாக அழியும்வரை சர்வதேசம் இப்படித்தான் மெளனமாக இருக்கப்போகிறதா?

இதனை புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் எவ்வாறு சர்வதேசத்திடம் எடுத்துக்கூறி அங்குள்ள உறவுகளின் விடுதலைக்கு வழியமைக்கப் போகிறார்கள் என்பது மிக முக்கிய கேள்வி. சர்வதேச சமூகம் இதுவரை காலமும் இவ்வாறு கொடூரங்களைப் புரிந்த சிறிலங்கா அரசிடமிருந்து தமது மக்களைக் காப்பாற்ற ஆயுதம் தரித்த விடுதலைப்புலிகளை 'பயங்கரவாதிகள்' என்ற ஒற்றைச் சொல்லினுள் அடக்கி அவர்களை வதம் செய்யத் துணைநின்றது. இன்றையநிலையில், தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்படும் இந்தக் கொடூரங்களிலிருந்து விடுவிக்க பன்னாட்டுச் சமூகம் தனது பொறுப்பை இனியாவது சரிவர முன்னெடுப்பதற்கு புலம்பெயர்ந்துவாழும் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களும் செயலாற்றவேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான காலகட்டம் இது.

இந்தப் பொறுப்பிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் சமூகம் தவறுமாயின், நாளை இந்தக் கொடூர சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தமிழினம் சிறிலங்கா அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து மீண்டும் ஆயுதம் தரித்து தமது விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியே ஏற்படும்.

சிங்களத்தின் வதைமுகாமிலிருந்து தமிழ் உறவுகள் வீறிட்டு அலறும் சத்தம் சர்வதேசத்துக்குக் கேட்கவில்லை, விட்டுவிடுவோம். இது தொடர்பில் அவசரமான நடவடிக்கை எடுக்கவேண்டிய புலம்பெயர்ந்துள்ள தமிழ்ச் சமூகம் என்ன செய்யபோகின்றது?

ஈழநேசன்

இடம்பெயர் மக்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம்: வீரமணி உள்பட 500 பேர் கைது;இலங்கை தமிழர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்: கி.வீரமணி

3 லட்சம் இலங்கை தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உணவு, உடை இல்லாமல் அவதிப்படுவதை கண்டித்தும் அவர்களை விடுவிக்கக்கோரி திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் ரெயில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

இதற்காக திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி தலைமையில் பெரியார் திடலில் திராவிட கழகத்தினர் ஏராளமானோர் திரண்டனர். கருஞ்செட்டை தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

ஈ.வி.கே. சம்பத்சாலையில் சென்ற அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கி. வீரமணி மற்றும் சுப. வீரபாண்டியன், ஜனார்த்தனம் உள்பட 500 திராவிட கழகத்தினர் பொலிஸ் வானில் ஏற்றப்பட்டு வேப்பேரி பவுல் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு சென்றனர்.

இலங்கை தமிழர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்: கி.வீரமணி

போராட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி,

3 லட்சம் ஈழத்தமிழர்களை ராஜபக்சே அரசு முள்வேலியில் அடைத்து வைத்துள்ளது. அவர்களை உடனே அங்கிருந்து அகற்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளுக்கு விரோதமாக பல லட்சம் உயிர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்.

தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்களவர்கள் குடியேறக்கூடாது, ஓரிரு மாதங்களில் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலங்கை தமிழர்களை மையமாக வைத்து இங்குள்ள மாநில அரசை குற்றம் சாட்டுகிறார்கள். ஈழத்தமிழர்களுக்காக இங்குள்ளவர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். முடியாவிட்டால் குற்றம் சாட்டம் வேண்டாம்.

இலங்கை தமிழர்களுக்காக முதல் அமைச்சர் கருணாநிதி 2 முறை பொறுப்புகளை இழந்தார். ஆட்சியை துறந்தார். அவர் இதில் காட்டும் ஈடுபாடு தெளிவானவை. அதை பயன்படுத்தி கொள்ளாமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுமானால் தமிழக மக்கள் ஒன்றுபட்டு தகுந்த பாடம் கொடுக்கும். இங்குள்ள அரசியல் போட்டிகளை வைத்துக்கொண்டு இலங்கை தமிழர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற ஒத்தகுரல் கொடுக்க வேண்டாமா? அவர்களுக்கு உதவுவது யார் என்பதை பார்த்து பயன்படுத்தி கொள்ள வேண்டாமா? முதல் அமைச்சர் தலைமையில் முள்வேலியை அகற்றும் தெம்பும் திராணியும் எங்களுக்கு உண்டு.

நமக்குள் இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியை இலங்கை பிரச்சினையில் பயன்படுத்தலாமா? இலங்கை அரசை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டக்கூடிய சக்தி இந்த அமைப்புக்கு உண்டு.

இது தேர்தலுக்காக கூடும் கூட்டம் அல்ல. லட்சியத்தை நம்புகிற கூட்டம். ஒத்த கருத்துள்ள ஒரு அரசு இருந்தும் மத்திய அரசு அலட்சியம் செய்கிறது.

இது அறப்போராட்டம். அடுத்ததாக இலங்கை தூதரகத்தை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்தப்படும்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேறுபக்கம் போகவேண்டாம். வேறுபக்கம் திசை திருப்பாதீர்கள். முதல் அமைச்சர் இலங்கை தமிழர்களுக்கு என்ன குற்றம் செய்தார். உணவு, உடை அனுப்பியது குற்றமா? போட்டிபோட வேறு அரசியல் களம் இருக்கிறது. இலங்கை தமிழர்களை பணயம் வைத்து பேசாதீர்கள் என்றார்




அவலத்தை தந்தவனிடமே பிச்சை! - ஜெகத் கஸ்பர்


ஈழத்திலிருந்துகடந்த மாத இறுதியில் இரண்டு தமிழ் கத்தோலிக்க ஆயர்கள் வந்திருந்தார்கள். அரசியல் பேச வரவில்லை, பேசவுமில்லை. தமிழகத்துப் பேராயர்கள், ஆயர்களிடம் தங்கள் மக்களின் சிலுவைப் பாதையைச் சொல்லி நம்பிக்கையும், தோழமையும் பெறவே வந்தார்கள். அறையைத் தாழிட்டு ஆயர்களோடு நெஞ்சம் திறந்த அவர்களால் அழாதிருக்க முடியவில்லை. ஆம், ஆயர்களும் அழுதார்கள். நம்பிக்கைகள் யாவும் தகர்ந்து போய்விட்டதொரு காலத்தில் மேய்ப்பர்களுக்கும் ஆறுதல் தேவையாகிறது. மானத்தை, தன்மதிப்பை உயிரினும் மேலாய் பேணியதோர் மனிதக்கூட்டம் இன்று ஒருவேளை உணவுக்காய், அவலத்தை தந்தவனிடமே பிச்சைப் பாத்திரம் ஏந்தி தலைகுனிந்து நிற்கும் அவலத்தை எந்த மேய்ப்பனால் தாங்கிக் கொள்ள முடியும்?

அக்டோபர் மாதம் அடைமழைக்காலம் தொடங்குமுன் அத்தனை மக்களும் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும். இல்லையேல் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மக்கள் சாக நேரிடும் என எச்சரிக்கை அறிக்கையொன்று ஐ.நா.அவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாய் ஒசசஊத ஈஒபவ ஊலடதஊநந என்ற ஐ.நா.செய்தி நிறுவனத்தில் எமக்குள்ள தொடர்புகள் கூறுகின்றன. ஆனால் கிராதக ராஜபக்சே அரசின் அருகாமைக் கூலிகள் போல் ஆகிவிட்டிருக்கும் ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனும் அவரது செயலர் விஜய் நம்பி யாரும் இந்த அறிக்கை வெளி வந்து விடாதபடி அமுக்கி வைத்திருக் கிறார்களாம். தமிழர்கள் நமக்கு உலகில் இன்று நண்பர்கள் எவருமில்லை என்பது மட்டுமல்ல, நியாயத்தின் காவலர்களாய் இருக்க வேண்டியவர்கள் கூட ஒட்டுமொத்தமாய் நமக்கெதிராய் அணிவகுத்து நிற்கிறார்கள். எல் லோராலும் கைவிடப்பட்டவர் களானோம்.



மூன்று லட்சம் தமிழ் மக்கள் திறந்த வெளியில் சிறையிடப்பட்டு கடந்த வெள்ளியோடு நூறு நாட்கள் ஆயிற்று. இவர்கள் எக்குற்றமும் செய்யாதவர்கள். பலமுறை அடித்துத் துவைக்கப்பட்ட அப்பாவிகள். முக்கிய மாக, ஏழைகள். இவர்களை நூறு நாட்கள் அடைத்து வைத்திருந்தது சட்டவிரோதமான செயல். இந்த திறந்த வெளிச் சிறைகளை பேணத்தான் இந்தியாவும் ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கிறது. தவறு, குற்றம், பாவம். இந்தியாவின் பணம் நமது பணம். தங்கள் வாழ்விடங்களில் மீண்டுமொரு சிறு வாழ்வை சூன்யம் விட்டுச் சென்ற புள்ளிகளிலிருந்து தொடங்கத்தான் நமது பணம் பயன்பட வேண்டுமேயன்றி அக்கிரமத்தின் சங்கிலிகளை மேலும் இறுக்கவும், அழுத்தி இறுக்கும் நுகத்தடிகளை அதிகமாக்கவுமல்ல. சட்டவிரோதமான பொதுமக்கள் சிறைகளைப் பேண துணைநிற்கும் நம் நாட்டு அதிகாரிகள் மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிகிறார்கள். இறை நீதி இவர்தம் தலைமுறைகளை சும்மா விடாது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லா பகுதிகளும் கண்ணிவெடிகள் கொண்டிருப்பவை அல்ல. அதிகபட்சமாய் பத்து சத நிலப்பரப்பில் அவை இருக்கலாம். நேர்மை இருந்தால் கடந்த நூறு நாட்களிலேயே அப்பகுதிகளை அடையாளம் கண்டு சிவப்புக்கொடி நட்டிருக்க முடியும். மழைக்காலம் தொடங்குமுன் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் மனம் இல்லை. அதனிலும் மேலாய் திறந்தவெளிச் சிறைகளிலேயே பாதித்தமிழர்கள் அழிந்தும், பலவீனமுற்று வாழத் தகுதியற்றவர்களாயும் ஆகிடவேண்டுமென ராஜபக்சே அரசு நினைக்கிறது. இதற்கு உதவத்தான் நமது ஆயிரம் கோடி ரூபாய். தமிழ் மக்களைப் போக விடு என உத்தரவிடும் ஒழுக்கம் நமது வெளியுறவுக் கொள்கைக்கு என்று வரும்?

இன்றுவரை முல்லைத்தீவிலிருந்து எத்தனைபேர் தப்பி வந்தார்கள், அவர்கள் பெயர் என்ன, ஊர், விபரங்கள் என்னவென்ற முறைப்படியான பதிவுகள் எதுவும் இல்லை. அதனைச் செய்வதற்கு ஐ.நா.அவை நிறுவனங்கள் எதையும் ராஜபக்சே அரசு அனுமதிக்க வில்லை. வலுவோடு இருக்கிற தமிழ் வாலிபர்களை இரவோடு இரவாய் தினம் எட்டு, பத்து என தீர்த்துக் கட்டும் கொடுமையை படிப்படியாய் நடத்தி முடிக்கத் தோதாகத்தான் இன்றுவரை முறைப்படியான பதிவு எதுவும் செய்யப்படவில்லை. இதனை முன்பு நாம் சொன்னபோது இங்குள்ள பெரிய ஆங்கிலப் பத்திரிகை முதலாளி "புலிகளின் பிரச்சாரகர்' என்று எள்ளினார். இந்த வாரம் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஒளிக்கோப்பு உலகை உலுக்கி, நமது அச்சங்களெல்லாம் எத்துணை உண்மையானவை என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

இப்படியாக எத்தனை படுகொலைகள் நடந்தன? நாம் பார்த்த ஒளிக்கோப்பு காட்டும் கொடூரம் பட்டப்பகலில் நடந்திருக்கிறது. எனில் கொடும் இரவுகளில் எத்தனை தமிழ் உயிர்கள் காற்றோடு கலந்தனவென்று எவருக்குத் தெரியும்? எனவேதான் உலக அமைப்புகளின் பார்வைக்கு வதைமுகாம்கள் வருவதை திட்டமிட்டு இலங்கை அரசு தடுத்து வருகிறது. உண்மையில் இலங்கையால் மட்டுமே முடிகிற காரியமல்ல அது. இந்தியா மட்டும் தன் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மீது கொஞ்சம் இறுக்கமும், தமிழர் மீது கொஞ்சம் இரக்கமும் வைத்தால் போதுமானது. மற்றவை தானாக நடக்கும்.

இந்தியாவைப் பகைத்துக் கொண்டு ராஜபக்சே ஊழிக்கூத்தெல்லாம் ஆடமுடியாது. இந்தியா கண்ணசைத்தால் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் ராஜபக்சேவை இறுக்க அணிவகுக்கும். சீனாவிடம் கூட நேரடியாகப் பேசி சரிக்கட்டும் ராஜதந்திர வலு இந்தியாவுக்கு உண்டு. இந்தியா இன்று குறி முண்டுக் கோவணம் கட்டி ராட்டை சுற்றிய மாமனிதனின் நாடல்ல. இது பெரிய வல்லரசு. செலவழிக்கும் திறனுள்ள சுமார் 40 கோடி நடுத்தர மேல் வர்க்கங்களை கொண்ட வருங்கால உலகச் சந்தை. இந்த சந்தையின் கண் சீறல்களுக்கு வியாபாரம் செய்ய விரும்பும் நாடுகள் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஆத லால்தான் இந்தியா மனது வைத்தால் நிலை மை நிச்சயம் மாறும் என நம்பிக்கையோடு சொல் கிறோம்.



இந்தியா தானாக மாறாது. தமிழகம்தான் இந்தியாவை மாற்ற முடியும், மாற்ற வேண்டும். அக்பர், அன்புடை நேரு இப்படி ஓரிருவரது காலங்கள் தவிர்த்து புதுடில்லி தர்பார் நெஞ்சிரக்கம் கொண்டு மானுடத்தை அரவணைத்ததாய் வரலாறு இல்லை. ஆனால் தமிழகம் ஒன்றுபட்டு நினைத் தால் புதுடில்லி மாறும். எனவேதான் வசைபாடு படலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மிச்சமிருக்கும் தமிழரையேனும் காத்திட எல்லா கட்சியினரும், அமைப்புகளும் இணைந்து ஒரு குரலாய் புதுடில்லியில் ஒலிக்க வேண்டுமென பாதம் விழுந்து மன்றாடுகின்றோம். உண்மையில் காங்கிரஸ் கட்சி எனக்கு பிடித்த கட்சிதான். இரண்டாம் தலை முறை தலைவர்களை அக்கட்சி அடை யாளம் கண்டு புடமிடும் காட்சி காண சிலிர்ப்பாயிருக்கிறது. நாளைய தேசம் குறித்த நம்பிக்கையும் பிறக்கிறது. ஆனால் தமிழகத்து காங்கிரஸ் பெரியோருக்கு தோழர் திருமாவளவன் மீது வருகிற கோபத்தில் கால் சதமேனும் ராஜபக்சே மீது வராதாவென்றுதான் ஒவ் வொரு நாளும் கடவுளை பிரார்த்திக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவா, அதிசயம் நடத்திக் காட்டு. பேராயர்களைப் பற்றி தொடக்கத்தில் கூறியிருந்தேன்.

எனது வாழ்வில் மறக்கவே முடியாத பேராயர் ஒருவரை நான் பதிவு செய்ய வேண்டும். அவர்தான் நினைவில் வாழும் முன்னாள் மதுரை பேராயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்கள். மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் மேல் மட்டிலா மதிப்பும் உள்ளார்ந்த நம்பிக்கையும் கொண்டவர். எப்போது அவரை சந்தித்தாலும் கலைஞரை சிலாகிப் பார். என்னை தெரிவு செய்து மணிலா வேரித்தாஸ் வானொலிக்கு அனுப்பி வைத்ததும் அவர்தான். குருகுல வாழ்வுக்கு ஒன்பதாம் வகுப்பில் என்னைத் தேர்வு செய்ததும் அவர்தான். 14-ம் வயதில் நாங்கள் 27 பேர் தெரிவு செய்யப்பட்டோம். தேர்வு நடைமுறைகளெல்லாம் முடிந்தபின் ஆசி பெறவேண்டி பேராயர் அலுவலகம் சென்று வரிசை யில் நின்றோம். பேராயர் முன் முழந்தாள்படியிட்டு அவரது மோதிரத்தை முத்தம் செய்ய வேண்டும். பேராயர்களின் மோதிரத்தை முத்தம் செய்வது கத்தோலிக்க மக்களிடையே பொது வழக்கம். எனது முறை வந்த போது நான் முழந்தாள்படியிடவுமில்லை, மோதிரத்தை முத்தம் செய்யவுமில்லை. கரங்கள் தொழுது வணக்கம் செய்தேன்.

""என்னடா... பேராயரின் மோதிரத்தை முத்தம் செய்யத் தயக்கமா?'' என்றார். நான் எப்பதிலும் சொல்லவில்லை. முதல் நாளாகிய அன்றே என் குருகுல வாழ்வு முடிந்து போகுமென்றுதான் அருகில் நின்ற ஆசிரியப் பெருமக்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மாமனிதர், மகான், தலைவர். குருகுல இயக்குநரான பின்னர் ஆயராக உயர்வு பெற்ற லியோன் தர்மராஜ் அவர்களை அன்றிரவே தனியாக அழைத்துக் கூறியிருக்கிறார், "அந்தக் காஞ்சாம்புரத்துப் பையனை கவனித்துக் கொள்ளுங்கள், வித்தியாசமான ஆளாய் வருவான் போல் தெரிகிறது' என்றிருக்கிறார்.

பௌத்த மகாநாயகதேரோவாக இருந்திருக்க வேண்டிய ஆஸ்வல்ட் கோமிஸ் என்ற சிங்களப் பேராயர் ஒருவர் போப்பாண்டவர் அரசு நடத்தும் உரோமாபுரி வரைக்கும் சென்று எப்படியாவது வேரித்தாஸ் வானொலியிலிருந்து என்னை நீக்க வேண்டுமென நீண்ட சதிசெய்த 2000-ம் ஆண்டில், கால்கள் அசைக்க முடியாமல் படுக்கையில் இருந்து கொண்டே சிங்களப் பேரினவாத இலங்கை திருச்சபையின் சதிக்கு செவிட்டிலறை கொடுத்து பின்வாங்கச் செய்த அந்தத் தலைவனை எப்படி நான் மறப்பேன்?

என்ன நடந்ததென்பது சுவாரசியமானது. உலகத் திருச்சபை, ஆசியத் திருச்சபை இரண்டையும் தன்வயப்படுத்தி சிங்களம் திமிருடன் நின்ற காலை மதுரை மாநகரில் படுக்கையில் இருந்து கொண்டே ""இலங்கையில் தமிழ்த் திருச்சபை அச்சுறுத்தப்படும் திருச்சபை. அவர்களால் அங்கு ஓங்கிக் குரல் எழுப்ப முடியாது. எனவே தான் அவர்களது குரலாய் தமிழகத் திருச்சபையும், ஆயர்களும் இங்கிருந்து பேச வேண்டியுள்ளது. ஃபாதர் ஜெகத் கஸ்பர் எனது நம்பிக்கைக்குரியவர். அவரது குரல் எனது குரல். எனது குரல் தமிழகத் திருச்சபையின் குரல். அவரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது'' என்று பெரிய அதிகாரிகளுக்குப் பதில் சொன்ன அந்தச் சூரியனை மனதில் நான் தொழாத நாளில்லை. எனக்காகப் பேசியதற் காகவல்ல, துன்புறும் என் இனத்திற்காகப் பேசியதால்.

(நினைவுகள் சுழலும்)

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA