Friday 11 September 2009

ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! - வெளியீடு

இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து.

எனினும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் தருணத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, இது காங்கிரசு தி.மு.க. கூட்டணியினரே எதிர்பார்த்திராத வெற்றி. பிரதமர் பதவிக் கனவில் மிதந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கோ இது பேரிடி.

ஜெயலலிதா கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்த ஈழ ஆதரவாளர்களுக்கும் இந்த முடிவுகள் நிச்சயமாக பலத்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். மத்தியில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு, பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை நிறுத்திவிட முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது.

தமிழக மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொய்த்து விட்டது. ஈழத் தமிழர்க்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் ஒரு எழுச்சி நிலவுவதாகவும், இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தின் எழுச்சியை விடவும் வலிமையான எழுச்சியை மக்கள் மத்தியில் காண்பதாகவும் அவர்கள் கூறி வந்ததையும் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கவில்லை.

இந்த வெற்றியை கருணாநிதியால் விலைக்கு வாங்க முடிந்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டு அழிந்தாலும், தனது வாரிசுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்த கிழட்டு நரி கருணாநிதி, பரிதாபத்துக்குரிய ஏழைத் தமிழர்களை 200, 300க்கு விலைக்கு வாங்கிவிட்டார். தமிழ் இனத்துக்குத் தான் ஏற்கெனவே செய்த துரோகம் போதாதென்று மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் மக்களையே விலைக்கு வாங்கியிருக்கிறார் கருணாநிதி எனும் கொடூரன்.

இருப்பினும், தமது தோல்விக்குப் பணபலம், கள்ள ஓட்டு என்பன போன்ற காரணங்களைக் கூறும் அருகதை ஜெயலலிதா, பா.ம.க., ம.தி.மு.க. போலி கம்யூனிஸ்டுகள் போன்றோருக்குக் கிடையாது. இவர்கள் அனைவரும் தம் சக்திக்கேற்ப இத்தகைய முறைகேடுகள் அனைத்தையும் செய்பவர்கள்தான். மேலும், இவையெல்லாம் இல்லாத தேர்தல் எப்போதும் இருந்ததில்லை. இவை தேர்தல் எனும் ஆட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட முறைகேடுகளாக மாற்றப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்ட ஈழ ஆதரவாளர்களை இத்தகைய சமாதானங்கள் திருப்தி அடைய வைக்கின்றன என்றால், இதை ஒரு வசதியான சுயமோசடி என்றுதான் சொல்ல @வண்டும்.

ஈழ ஆதரவாளர்களின் தீவிரப் பிரச்சாரம், வலிமையான கூட்டணி, ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் மக்களின் மனோபாவம் என்பன போன்ற காரணிகளையெல்லாம் தாண்டி காங்கிரசு தி.மு.க. கூட்டணிக்குத் தமிழக வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், தமிழக மக்களின் இன உணர்வை எப்படி மதிப்பிடுவது? ஒரு ரூபாய் அரிசி, வண்ணத் தொலைக்காட்சி, பணம், சாதி, நலத்திட்டங்கள் போன்ற எந்தக் காரணத்துக்காக தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று கொண்டாலும், அதிலிருந்து கிடைக்கும் விடை ஒன்றுதான் தமிழனுக்கு இன உணர்வில்லை, சொரணையில்லை. இந்த விடை புதியதல்ல. தமிழுணர்வாளர்கள் எனப்படுவோர் தமிழக மக்கள் மீது தேவைப்படும் போதெல்லாம் வைக்கும் குற்றச்சாட்டுதான் இது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றிருந்தால், "தமிழன் ஏமாளியல்ல என்பதை நிரூபித்து விட்டான்" என்பன போன்ற வீரவசனங்களை நாம் கேட்க நேர்ந்திருக்கும்.

ஆனால் உண்மை இந்த இரண்டு முனைகளிலிருந்தும் நெடுந்தூரத்தில் இருக்கிறது. ஜெயலலிதாவையும் ராமதாசையும் தாங்கள் நம்பியதைப் போலவே தமிழர்களும் நம்பவில்லை என்ற காரணத்துக்காக அவர்களை சொரணையற்றவர்கள் என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, தனி ஈழப் பிரகடனத்தை வெளியிட்ட ஜெயலலிதா, போரை நிறுத்துவதற்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்கும், அறிக்கை விடுவதற்கு மேல் இனி வேறு ஏதாவது செய்யப்போகிறாரா என்ற கேள்விக்கு ஈழ ஆதரவாளர்கள் விடை சொல்ல வேண்டும்.

போயஸ் தோட்டத்தின் நெடுங்கதவுகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சொர்க்கவாசல் திறந்து தரிசனம் எப்போது கிடைக்கும் என்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கே தெரியாதபோது அவர்களை நம்பியிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு எப்படித் தெரியும்?

அடுத்து அமெரிக்கத் தூதரகத்தின் கதவுகளைத் தட்டத் தொடங்கி விட்டார் நெடுமாறன். உலக மக்களின் எதிரியும் ஈராக், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பல இலட்சம் மக்களைப் படுகொலை செய்துவரும் ஆக்கிரமிப்பாளனுமான அமெரிக்க வல்லரசின் அதிபர் ஒபாமாவுக்குப் பூங்கொத்து கொடுப்பதற்கு! ஒபாமாவால் ஒப்புக்கு விடப்பட்ட ஒரு அறிக்கைக்கு இத்தகைய அடிமைத்தனமான மரியாதை!

கருணாநிதி, சோனியா, அத்வானி, ஜெயலலிதா... கடைசியாக ஒபாமா! இந்திய மேலாதிக்கத்தையோ, அமெரிக்க வல்லரசையோ அம்பலப்படுத்தாமல், அவர்களை எதிர்த்துப் போராடாமல், அவர்களுடைய தயவில் விமோசனம் பெற்றுவிடலாம் என்று நம்புகிறவர்கள், மக்கள் மீது நம்பிக்கை வைக்காததில் வியப்பில்லை.

பிழைப்புவாதிகளையும் பாசிஸ்டுகளையும் தாங்கள் நம்பியது மட்டுமின்றி, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு மக்களிடமும் பிரச்சாரம் செய்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். உள்ளூர் பிரச்சினைகள், சாதி, ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி முதலான பல்வேறு காரணங்களால் ஆளும் கட்சிகள் மீது மக்களுக்குத் தோன்றியிருக்கக் கூடிய அதிருப்தியை, ஈழ ஆதரவாக அப்படியே மடைமாற்றி விட முடியும் என்று கணக்கு போட்டார்கள். அந்தக் கணக்கு பொய்த்து விட்டது.

இன்று கருணாநிதி அணி பெற்றிருக்கும் வெற்றியை, காங்கிரசின் ஈழக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்வது எந்த அளவுக்குத் தவறானதோ, அதேபோல, ஜெயலலிதா அணி வென்றிருந்தால், அந்த வெற்றியை ‘ஈழ ஆதரவு அலை’ என்று வியாக்கியானம் செய்வதும் உண்மைக்குப் புறம்பானதாகவே இருந்திருக்கும்.

தாங்கள் அளித்த வாக்குகள் தந்த அதிகாரத்தையும், தாங்கள் வழங்கிய வரிப்பணத்தையும் இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகப் பயன்படுத்தும்போது, அது குறித்த உணர்வின்றி இருக்கிறார்கள் தமிழ் மக்கள் என்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய உண்மை. இந்த உண்மை தெரிந்திருந்தும் அதனை ஈழ ஆதரவாளர்கள் அங்கீகரிக்கவில்லை. தமிழகமே பொங்கி எழுந்து நிற்பதாகப் புனைத்துரைத்தார்கள். ஜெயலலிதாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அந்தப் புனைவை உண்மையாக்கிவிடலாமென முனைந்தார்கள். அந்த முயற்சிதான் தோல்வியடைந்திருக்கிறது.

ஈழப் பிரச்சினையின்பால் அனுதாபம் கொண்டிருந்த மக்களும்கூட ஜெயலலிதா அணியினர் மீது கடுகளவும் நம்பிக்கை கொள்ளவில்லை. ‘இலட்சக்கணக்கில் கூட்டம் கூட்டி, மாநாடு நடத்தும் இந்தக் கட்சிகளுக்கு ஈழப் பிரச்சினையில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் தமது போராட்டம் மூலம் கருணாநிதி அரசை நிலைகுலைய வைத்திருக்க முடியும். பிணத்தைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதைத் தவிர இவர்களுக்கு வேறு நோக்கமில்லை’ என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். மக்களிடம் இருந்த இந்தத் தெளிவுகூட, மார்க்சிய லெனினியவாதிகள் என்றும் பெரியாரிஸ்டுகள் என்றும் கூறிக் கொண்டோரிடம் இல்லை என்பதே உண்மை.

இந்திய மேலாதிக்க எதிர்ப்பு, தேசிய இனங்களின் தன்னுரிமை என்ற அரசியல் முழக்கங்களின் கீழ் மக்களை அணிதிரட்ட முயற்சிக்காமல், ஈழப் படுகொலை தமிழக மக்களிடம் தோற்றுவித்த அனுதாப உணர்வை, அப்படியே குறுக்கு வழியில் இனவுணர்வாக உருமாற்றி விடலாமென ஈழ ஆதரவாளர்கள் முயன்றார்கள். அந்த முயற்சிதான் தோல்வியடைந்திருக்கிறது.

சாகச வழிபாடும் சரி, இத்தகைய சந்தர்ப்பவாத வழிமுறைகளும் சரி, அவை மக்களுடைய அரசியல் பங்கேற்பையும், முன்முயற்சியையும் மறுப்பதுடன் அவர்களை வெறும் பகடைக்காய்களாகவே கருதுகின்றன. சூதாட்டத்தின் தோல்விக்குப் பகடைக்காய்களை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?

இந்தத் தேர்தலில் பல வகைப்பட்ட ஈழ ஆதரவாளர்கள் ஜெயலலிதாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்கு சேகரித்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அணி வென்றிருக்கும் பட்சத்தில் இவ்வெளியீடு அதிகம் பயனுள்ளதாக இருந்திருக்கக் கூடும். தற்போது ஜெயலலிதா தோற்றுவிட்டாரெனினும், சந்தர்ப்பவாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதுதான் இந்த வெளியீட்டின் இலக்கு.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA