Monday 24 August 2009

தமிழ் மக்களுடைய உண்மையான அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றப்பட்டது அரசினால் மாத்திரமல்ல, தமிழ் இயக்கங்களாலும்

யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? என்னும் தலைப்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட கருத்தரங்கில் புளொட் தலைவர் உரை… கலாநிதி என்.எம்.பெரேரா நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? என்னும் தலைப்பில் விசேட கருத்தரங்கு கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்றுமாலை 4.30முதல் 7மணிவரை நடைபெற்றது. மேற்படி கருத்தரங்கில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் பேராசிரியருமான அமைச்சர் திஸ்ஸ விதாரண, கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி ரவீந்திரகுமார், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீடத் தலைவர் கலாநிதி கீத பொன்கலன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.எம். நௌசாட், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணியும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளருமான கந்தையா நீலகண்டன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,..

என்.எம்.பெரேரா ஞாபகார்த்தக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அவருடைய மருமகனான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பினையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொழும்பில் மக்களுடன் நேரடியாக தொடர்பாடக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
1956ம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது இரு மொழிகளென்றால் ஒருநாடு, ஒரு மொழியென்றால் இருநாடு என்று திரு.கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள் பாராளுமன்றத்திலேயே கூறியிருந்தார். அதேபோல 1961ம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்படுத்துவேன் என்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் கங்கணங்கட்டி வடகிழக்கிலே சிங்கள அதிகாரிகளை அனுப்பியபோது அங்கு தந்தை செல்வநாயகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் வீ.பொன்னம்பலம், சமசமாஜக்கட்சியின் நாகலிங்கம் போன்ற இடதுசாரிகள் பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர். இப்போராட்டத்தின்மூலம் தமிழ் மக்கள் தம்முடைய எதிர்ப்பினை பலமாக காட்டியதால் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கில் அரச நிர்வாகம் முற்றாக முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த போராட்டம் ஆயுத பலத்தால் நசுக்கப்பட்டது. அதேபோல தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வேண்டி எடுக்கப்பட்ட போராட்டங்கள் அனைத்துமே அரசினால் ஆயுதங்கள் கொண்டு நசுக்கப்பட்ட போது ஆயுதத்தை ஆயுதத்தால்த் தான் சந்திக்க வேண்டுமென்று இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திலே குதித்தார்கள்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது பல இயக்கங்கள் அங்கு உருவாகிய போதிலும், இறுதியாக நான்கு ஐந்து இயக்கங்கள் பலம்பொருந்திய இயக்கங்களாக உருவாகின. இருந்தாலும் தமிழ் மக்களின் சாபக்கேடு போல, அந்த இயக்கங்களிடையே நடந்த மோதல்கள் அல்லது புலிகள் அமைப்பு தாங்களே தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக அனைத்து இயக்கங்களையும் பலமிழக்கச் செய்து தாங்கள் பலம்பொருந்திய இயக்கமாக உருவாகியது. இதில் ஒரு இயக்கத்தை மட்டும் குறைகூறுவதல்ல எனது நோக்கம். நிச்சயமாக பிழைகளிலேயே அனைவருக்கும் பங்கிருக்கிறது என்பதை நாம் தெளிவாக அறிவோம். இயக்கங்களுக்கிடையே இந்தப் பங்கிலே கூடக்குறைய இருக்கலாம். இவைகளை இன்று தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனத்தையும் நாம் அடைந்துவிட முடியாது.
இந்தவருடம் மே மாதம் 17ம் 18ம் திகதிகளில் நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும். புலிகளின் மரபுரீதியான ஆயுதப் போராட்டம் முற்றாக தோற்கடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்மக்கள் மத்தியில் தாம் ஒரு தோற்கடிக்கப்பட்ட இனம் அல்லது கைப்பற்றப்பட்ட இனம் என்ற மனப்பான்மை உருவாவதை நாம் காணக்கூடியதாக இருந்தது. புலிகள் ஏகப் பிரதிநிதிகளாக இருந்த காரணத்தினால், அவர்கள் விட்ட பிழைகளால் உலக நாடுகள் அவர்களைப் பயங்கரவாதிகளாக தடைசெய்ய, அவர்களது போராட்டமும் ஒரு பயங்கரவாதப் போராட்டமாக உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கு அரசுக்கு இலவாகி விட்டிருந்தது. இதனை ஒரு பயங்கரவாதப் போராட்டம் தோற்கடிக்கப் பட்டுள்ளதென்பதாக உலகிற்கு எடுத்துக்கூற அரசினால் முடிந்தது.
தமிழ் மக்களுடைய உண்மையான அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றப்பட்டது அரசினால் மாத்திரமல்ல எங்களாலும்கூட என்பதுடன் தமிழ் மக்கள்கூட அதற்கு நிச்சயமாக ஒரு பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றனர் என்றே நான் நம்புகின்றேன். எனவே, இன்று நடக்க வேண்டிய விடயம் என்ன என்பதே இங்கு முக்கிய விடயமாகும்.
ஒன்று இடம்பெயர்ந்த 3லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள்ளே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இப்போது இடைக்கால மழை ஆரம்பித்தபோது அந்தப் பகுதிகளுக்கு நாம் சென்று பார்த்தோம். வெள்ளத்தில் சிக்கி கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டும், கிழிந்த நிலையிலும் உள்ளன. மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த முகாம் பகுதியானது சேற்றுப் பகுதியாகும். சிறிய மழை பெய்தாலும் கூட அது சேற்றுப்பூமியாக மாறிவிடும். அந்த மக்கள் அங்கு வாழமுடியாது. நித்திரையில்லாமல், சமைத்து உண்ண முடியாமல் தங்கள் குழந்தைகளை இடுப்பில் சுமந்தவண்ணம் அந்த மக்கள் படும் வேதனைகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. உண்மையிலேயே அதைப் பார்க்கின்ற போது தமிழ்மக்கள் போல் இந்த உலகத்தில் வேறெங்கும் ஒரு பகுதியில் வாழ்கின்ற மக்கள் இவ்வளவு அவலத்திற்கு முகம் கொடுத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.
இலட்சக்கணக்கான மக்கள் 24மணிநேரம் உணவின்றி சமைக்க வழியின்றி நிற்க வழியின்றி அங்கு வெள்ளம் உள்ள பகுதிகளைவிட்டு ஏதாவது ஒரு தண்ணீர் இல்லாத பிட்டி அகப்படுகின்றதா என்று தேடும்நிலை அங்கிருக்கிறது. நோய்தொற்று அபாயமும் அங்கு பாரிய அளவில் நிலவுகிறது. இந்த நிலைமையை மாற்றவேண்டும். இந்த மக்கள் தங்களது சொந்த கால்களில் நிற்கும் வகையில் மீண்டும் இந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களிலே குடியேற்றப்பட வேண்டும். இதுதான் இன்று எங்கள் அனைவருக்கும் முன் இருக்கின்ற முதலாவது கடமையாகும் என்று நான் நம்புகிறேன்.
இந்த கடமையை செய்வதற்கு கட்சிக்கு அப்பால், கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தமிழ் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ்மக்களின் பிரச்சினையைப் புரிந்து கொண்டு அதனைத் தீர்க்க வேண்டுமென்று அக்கறைப்படுகின்ற இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமைப்பாட்டை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்குவதன் மூலமே இவ்விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
அரசாங்கம் இந்த மக்களை மீளக்குடியமர்த்த தயங்குகின்றது. அங்குள்ள வீடுகள் உடைக்கப்பட்டுள்ளன. அங்கு மிதிவெடிகள் புதைக்கப்பட்டு உள்ளன. ஆகவேதான் அப்பகுதிகளில் உடனடியாக மீள்குடியமர்த்த முடியாதென்று கூறுகின்றனர். ஆனால் அங்கிருக்கின்ற மக்களில் சுமார் 40ஆயிரம் மக்கள் யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். மிகப் பெரும்பான்மையான மக்கள் மட்டக்களப்பு, திருமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இன்னும் ஒரு பகுதியினர் மன்னார், வவுனியாவைச் சேர்ந்தவர்கள். வன்னிக்கு வௌ;வேறு விடயங்களுக்காக சென்றவர்கள் யுத்தம் ஆரம்பித்து பாதை அடைப்பட்டவுடன் அங்கு தங்கியிருந்தவர்கள். இவர்களையெல்லாம் அனுப்புவதில் எந்தவித கஸ்டமும் இருக்கமுடியாது.
இவர்களை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இப்படியானவர்களை அனுப்பினால் கூட ஏறக்குறைய அரைவாசிப் பேர்வரையில் அந்த முகாம்களில் குறைந்து விடுவார்கள். அதையும் அவர்கள் செய்வதற்கு தயங்குகின்றனர்.
நான் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் கதைத்த போது, உடனடியாக யாழ். மக்களை அனுப்புவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக கூறி எம் முன்னே அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார். இங்கிருந்து உத்தரவுகள் சென்றாலும் அங்கு சில விடயங்கள் நடப்பதைக் காணவில்லை. முகாம்களுக்குள் புலிகள் சிலர் இருப்பதாக அவர்கள் எம்மிடம் சுட்டிக் காட்டிய போது, ஒரு சிறுதொகை புலிகள் முகாம்களுக்குள் இருப்பதால் இலட்சக்கணக்கான மக்களை தண்டிக்க முடியுமா? இது நியாயமா? என்று கேட்டிருந்தேன். எனவே இம்மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு எங்கள் கட்சிகள் மத்தியிலே ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
1970ல் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் 1983ல் உச்சம் பெற்றது. 1983களில் நாம் இருந்த நிலைமையைப் பாருங்கள். இன்றிருக்கின்ற நிலையைப் பாருங்கள். இன்று வடபகுதியைச் சேர்ந்த 40சத வீதமான மக்கள் கம்பிவேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்தது என்ன செய்வதென்ற நிலையிலுள்ளனர். வவுனியாவிலிருந்து கொழும்பு வருவதென்றால் பாதுகாப்பமைச்சின் அனுமதி தேவை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதென்றால் பாதுகாப்பமைச்சின் அனுமதி தேவை. இப்படியாக 1983களில் நாங்கள் இருந்ததைக் காட்டிலும் ஆகக் குறைந்தது ஒரு ஐம்பது வருடங்கள் பொருளாதார ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கிப் போயுள்ளோம். இவற்றையெல்லாம் குறிப்பிட்டு ஆயுதப் போராட்டம் பிழையென்று நான் சொல்ல வரவில்லை. அதனை முன்னெடுத்துச் சென்ற விதமே பிழை. மக்களை மாக்களாகப் பாவித்து ஒரு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியதற்கு நிச்சயமாக நாங்களும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றோம்.
இவ்விடயத்தில் அரசுகள்மீது மட்டும் பழியைப் போட்டுவிட முடியாது. சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வந்தார்கள். ஆனால் அவற்றை வென்றெடுக்கவென போராட்டம் ஆரம்பித்த நாங்கள், இயக்கங்கள், தமிழ் மக்களுடைய உரிமைகளை, சுதந்திரத்தை ஏறக்கறைய முற்று முழுதாகவே பறித்தோம். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனைக் கூறுவதற்கு எந்தவித தயக்கமும் எமது கட்சியிடம் இல்லை. இதனைக் கண்ணாலேயே பார்த்திருக்கிறோம். இந்த பிழைகளின் விகிதாசாரத்தில் இயக்கங்களிடையே வித்தியாசம் இருக்கலாம். புலிகள் எண்பதுவீதம் பிழைகள் செய்திருக்கலாம் மிகுதி இருபது வீதம் பிழைகள் மற்றைய இயக்கங்களிலுமுள்ளது.
தமிழ்க்கூட்டமைப்பினர் கூறுகின்றனர் தங்கள் கைகளில் இரத்தமில்லை என்று, ஆனால் அவர்களுக்கும் இதில் பங்கிருக்குதென்பது இங்கிருக்கிருக்கக் கூடியவர்கள் பலருக்கும் தெரியும். அன்று இவர்கள் மேடையில் பேசிய பேச்சுக்களைக் கேட்டால் இது நன்றாகப் புரியும். அனைவருக்குமே அதில் பங்கிருக்கிறது என்பதே உண்மையாகும். இதனை விடுத்து இனி எம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கின்றது. பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களை மீண்டும் வாழவைக்க வேண்டும் என்பதே அது.
ஒன்று அகதி முகாமில் அல்லல்படுகின்ற மக்களை மீள்குடியேற்ற வேண்டும், அதற்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இரண்டாவது தமிழ்மக்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க வேண்டும், அதற்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். நாங்கள் என்று கூறுகின்றபோது தமிழ்கட்சிகள் மாத்திரமல்ல. எங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கக்கூடிய கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நிச்சயமாக ஒன்றுபட வேண்டும். கிழக்கைப் பொறுத்த மட்டில் முஸ்லிம் மக்களைப் புறக்கணித்து விட்டு அங்கு ஒரு தீர்வுகாண முடியாதென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒற்றுமை என்று சொல்லும் போது நீங்கள் நினைத்துவிடக் கூடாது 1985ல் வெளிச்சக்திகளால் உருவாக்கப்பட்ட ஈ.என்.எல்.எவ் போன்ற ஒற்றுமை என்று. திம்புக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லும் நிலையே அங்கு ஏற்பட்டது. தேர்தலுக்காக ஒரு கூட்டு அல்லது புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லுவதற்காக ஒரு கூட்டு. இவ்வாறான கூட்டினை நான் சொல்லவில்லை. ஏனெனில் நிச்சயமாக தேர்தலுக்காக ஒரு கூட்டு என்றுமே தமிழ்மக்களுக்கு உதவியது கிடையாது. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அணுகுவதற்கு தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கு, இன்று தமிழ்மக்கள் படுகின்ற இன்னல்களை தீர்ப்பதற்கான ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர முடியாவிட்டாலும் ஒரு கருத்தொருமைப்பாடு என்ற அடிப்படையிலேயே ஒற்றுமை வருமென்றால் நிச்சயமாக பல விடயங்களை தீர்த்துக் கொள்ள முடியும். இதனை அனைத்துக் கட்சிகளும் நினைவிற் கொள்ள வேண்டும்.
அனைத்து கட்சிகளுமே அடிப்படை விடயத்தில் அதாவது, தமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கின்ற இன்னல்களை தீர்ப்பதிலும், இம்மக்களை மீள்குடியேற்றுவதிலும், இவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் தங்கள் காரியங்களைச் செய்து கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதிலும் எங்களாலான அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இது ஒரு தனிக்கட்சியோ தனிநபரே செய்யும் விடயமல்ல. ஆகவே இன்று கட்சிகளைப் பொறுத்தமட்டில் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றோம். ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்ததும் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு ஏக்கம் ஏற்பட்டது. நாம் தோற்று விட்டோம் அடுத்தது என்ன என்ற ஏக்கமுடனேயே தமிழ்மக்கள் உள்ளனர்.
எனவே இதற்கு உடனடியாக நாம் ஒன்றுமைப்பட்டு மக்களின் அவலநிலையைப் போக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டும். இனியொரு ஆயுதப்போராட்டம் நிச்சயமாக நாம் பார்க்கக்கூடிய காலத்திற்குள் நடக்கக்கூடிய காரியமல்ல. ஆகவே எங்களைப் பொறுத்தமட்டில் முற்றுமுழுதாக இனியொரு ஆயுதப் போராட்டம் நாட்டில் வரக்கூடாதென்பதில் மிகவும் அக்கறையாக உள்ளோம். ஏனென்றால் ஆயுதப் போராட்டத்தால் நாங்கள் அடைந்த நன்மைகளைக் காட்டிலும் அழிவுகளே அதிகமென்பதை பார்த்திருக்கிறோம். தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு எழுச்சியையோ அல்லது கோசங்களையோ எழுப்பி வீதிகளில் இறக்கி போராடி மக்களை நாங்கள் நேரடியாக ஆபத்துக்குள் தள்ளிவிட விரும்பவில்லை.
தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அக்கறை கொண்டுள்ள இடதுசாரிக் கட்சிகள் என்பனவற்றின் கருத்தொருமைப் பாட்டுடான முன்னெடுப்புகள் தற்போது அவசியமாகின்றது. எமது மக்களின் பிரச்சினை தொடர்பில் விளங்கிக்கொண்டு அதற்கு ஆதரவுக் குரல்கொடுக்கும் இடதுசாரி கட்சிகள் மற்றும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொண்டுள்ள தென்னிலங்கை சக்திகள் ஆகியவற்றுடன் ஐக்கியப்பட்டு பணியாற்றவே விரும்புகின்றோமென்பதுடன் இதன்மூலமே அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்றும் நிச்சயமாக நம்புகின்றோம் என்றார்.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA