Monday 24 August 2009

நல்லூரில் தீர்த்தமாகிய வன்னி வறிய மக்களின் குருதி

நேற்றுவரை தமிழ்மக்களின் இரத்தம் குடித்த சிங்கள விமானங்கள் இன்று நல்லைக் கந்தன் திருவிழவில் பூத்தூவுகின்றது. இதே வேளை வவுனியா தடுப்பு முகாம்களில் மக்கள் தினம் நோயாலும் சித்திரவதைகளாலும் மடிந்தவண்ணம் உள்ளனர். சரணடைந்த பல்லாயிரம் போராளிகள் பட்ணிபோடப்பட்டு நோய்களுக்கு மருத்துவம் மறுக்கப்பட்டு தினம் பத்து பதினைந்து என்று சாகடிக்கப்படுகின்றனர். இரகசியமாக கொல்லப்படுகின்றவர்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. தப்பியோடி காடுகளில் மறைந்த போராளிகள் உணவின்றி பரிதவித்து மடிகின்றனர். இவை எல்லாம் ஈழத்தில் ஒரே நேரத்தில் நடந்தேறும் நிகழ்வுகள்.

அனைத்தும் இலங்கை இந்திய அரசின் ஜனநாயகத்துள் அடங்குகின்றது. இவைகளே இந்த நாடுகளின் ஜனநாயகம். சிங்கள அரசு செய்யும் தமிழ்மக்கள் மீதான அனைத்து கொடுமைகளுக்கும் குடைபிடிப்பது ஒன்றுதான் இந்திய அரசுக்கு தற்போதுள்ள வழி. மேலும் மீள்குடியேற்றங்களை தடுத்துநிறுத்தும்படியான ஆலோசனைகளும் சரணடைந்த போராளிகளை கொல்லும் வழிவகைளையும் போதிப்பதும் இந்திய அரசின் உள்ளக நடவடிக்கையாக இருக்கின்றது. புலிகள் இருக்கும் வரை புலிகளை சாட்டி இலங்கைக்குள் மூக்கை நுளைத்த இந்திய அதிகாரவர்க்கம் இப்போது எஞ்சி தமிழர்களை நசுக்குவதில் சிங்கள அரசுடன் கைகோர்ப்பது ஒன்றே இலங்கைக்குள் மூக்கை நுளைப்பதற்கான வழி. அனைத்து கொடுமைகளையும் இலங்கை அரசுடன் சேர்ந்து செய்வதற்கும் அவற்றை சர்வதேசத்தின் முன்னால் இலங்கை அரசு நியாயப்படுத்த இந்தியா பக்கபலமாக இருப்பதுமே இலங்கை இந்திய உறவுக்கான இறுதிப்பாலமும் இலங்கைக்குள் தொடர்ச்சியாக மூக்கை நுளைப்பதற்கான வழியும் ஆகின்றது.

இங்கே ஆதிக்க வர்க்கம் தமது தேவைகளை நெழிவுசுழிவுகள் ஊடாகவும் சூழ்ச்சிகள் ஊடாகவும் நகர்த்துகின்றது. படிப்படியாக வடிகட்டப்பட்ட அடிமட்ட வறிய மக்களின் வாழ்வே துவசம் செய்யப்படுகின்றது. வவுனியாக தடுப்புமுகாம்களில் உறிஞ்சி எடுக்கப்பட்ட வறிய மக்களின் குருதி யாழ் நல்லைக் கந்தன் திருவிழாவில் பூவாகத் தூவப்படுகின்றது. இதன் மூலம் சர்வதேசத்துக்கு நாட்டின் அமைதியும் சந்தோசமுமான வாழ்வு காட்சிப்படுத்தப்படுகின்றது.

பயங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரால் உலகெங்கும் நிறுவப்படும் ஜனநாயகச் சுவர்கள் மனித சதைகளாலும் எலும்புகளாலும் உருவாக்கப்படுகின்றது. பின்னர் வெள்ளை வண்ணம் பூசி ஜனநாயகம் என்று எழுதப்படுகின்றது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்களுக்கு அவலமே விதியாகின்றது. மீட்சி என்பதுக்கு எந்த நம்பிக்கை தரும் விசயமும் இல்லை. அவர்களால் இனி மீள்வது என்பதும் இயல்பான வாழ்வுக்கு திரும்புவதென்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லை. அவர்கள் குரவளையை அனைத்து ஆதிக்க சக்திகளும் நெரிக்கின்றது.

வன்னி பெருநிலப்பரப்பு வறிய மக்கள் ஆடுகளாக இழுத்துவரப்பட்டு கோயில் பலிபீடங்களில் தமிழ்சிங்கள முதலாளிகளால் பலியிடப்படுகின்றார்கள். ஐயோ என்ற வவுனியா முகாம்களின் ஓலமும் அரோகரா என்ற யாழ் நல்லூர் கந்தன் திருவிழாச் சத்தங்களும் ஒன்றாக ஈழத்தில் இருந்து எழுகின்றது. வறிய மக்களின் குரல் அமைதியாகின்றது. பசியோடும் பட்டிணியோடும் சக்தியில்லாத சீவன்களால் சத்தமாக அழ முடியாது. அதை காதுகுடுத்து கேட்பதற்கு தமிழர்கள் உட்பட உலகில் யாரும் இல்லை.

இந்த மக்கள் வாழ்வு துவசம் செய்யப்படுவதில் ஏனைய மக்களின் பங்கு சிங்களத்திற்கு நிகராக உள்ளது. போராட்டத்தில் இருந்து நழுவிய தமிழ்மக்களுக்கு தமிழீழம் வேண்டும் என்ற தீராத அவா இந்த மக்களை மிகவும் நசுக்க காரணமானது. தமிழீழக் கனவை அடைய இந்த மக்களை போராட்டம் நிர்ப்பந்தித்தது. போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் இன்று சிங்களத்துடன் ஒட்டியிருக்கலாம், சம்மந்தம் இன்றி இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவனின் சுதந்திரம் என்ற விருப்பும் அதன் நிமிர்த்தம் அவனுடைய எதிர்பார்ப்புக்களும் இந்த மக்களின் அவலத்துக்கு காரணமாகின்றது என்பது மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவனாலும் உணரப்படும்.

தமிழக மக்களை எதிர்பார்ப்பதோ அங்கிருக்கும் அரசியல் தலமைகளை எதிர்பார்ப்பதோ எதுவிதத்திலும் வதைபடும் மக்களுக்கு உதவமாட்டாது. அவர்களது அனைத்தும் இந்தியன் என்பதில் அமிழ்ந்து போகின்றது. அதிலிருந்து அவர்களால் எழுந்து வர முடியாது. ஈழமக்களின் சதைகளிலும் குருதியிலும் அரசியல் நடத்திப்பழகியவர்கள் என்னும் கொஞ்சம் வதைமுகாம் மக்களைப்பற்றி பேசி அரசியல் செய்யலாம். அதைவிட அங்கிருந்து எதுவும் இல்லை. ஒரு இந்தியனால் மனிதாபிமானம் பேச முடியாது. தமிழக தமிழன் இந்தியனில் இருந்து வெளியில் வர முடியாது. இதற்கு மேல் அவர்களைப்பற்றி பேச எதுவும் இல்லை.


கடமையை செய் பலனை எதிர்பாராதே, கடவுள் நம்பிக்கை உள்ளவன் பாவங்களுக்கு பரிகாரம் செய், மோட்சத்தை நம்புகின்றவன் புண்ணியத்தை செய், இது அனைத்துக்கும் பொருத்தமானதே வதைமுகாம் மக்களுக்காக குரல் கொடுப்பது. இந்த உலகத்தின் ஜனநாயகம் குறித்து நாம் போதியளவு புரிந்தாகிவிட்டது. அதனுடன் மல்லுக்கட்டி எமக்கு எந்த ஒரு துரும்பும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், எமது மக்களின் வதைகளை ஜனநாயகச் சுவர்களில் எழுதிக்கொண்டிருப்போம். பலனில்லாமல் காரியத்தை செய்ய முனைவது பயித்தியக்காரத்தனம் என்பதற்கு அப்பால் நாம் மனுசர்களாக எம்மை மீட்டுக்கொள்வதற்கு இதை விட வேறு வழியில்லை.

யுத்தத்தின் இறுதிக்கட்ட நாட்களில் நடந்தேறிய அவலங்களுக்காக வீதிகளில் இறங்கிய போது மனுசத்தனம் இனத்தின் மீதான பாசமாக வெளிப்பட்டது. இன்றும் வெடிச்சத்தங்கள் இல்லாமல் உயிர்கள் பறிக்கப்படுகின்றது. பரபரப்பில்லாமல் உயிர்கள் பறிக்கப்படுகின்றது. நேற்றும் இன்றும் நாளையும் நாங்கள் வெற்றி தோல்விக்கு அப்பால் மனுசத்தனத்துடன் இருப்போம்.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA