Saturday 29 August 2009

வேலி பாய்ந்து போன சேவல்..!


இஞ்சருங்கோ.. எங்கட வீட்டுச் சேவல் அடுத்த வளவுக்க போய் அவையின்ர பேட்டோட கலைபடுகுது.. ஒருக்கா சோமண்ணையட்டச் சொல்லிட்டு இஞ்சால துரத்திக் கொண்டு வாங்கோப்பா. அங்க போய் பழகிட்டு என்றால் பிறகு அங்கையே தங்கிடும் அப்பா. இந்த முறை எங்கட புள்ளிக் கோழிக்கு அடை வைக்கலாம் என்றிருக்கிறன்.

ஓமடியப்பா.. நானும் கவனிச்சனான். அவர் இப்ப கொஞ்ச நாளா அங்கதான் அதிகம் மிணக்கடுறார். உந்த ஊரல்லாம் திரிஞ்சு சாவகச்சேரி சந்தையில வேண்டி வந்த வெள்ளைடையன் சேவல் என்று வளர்த்தா.. அவர் எனக்கு உச்சிக் கொண்டு திரியுறார். ஆக மிஞ்சிப் போனா காலை முறிச்சு கறிச் சட்டிக்க போட வேண்டியதுதான்.

இல்லையப்பா.. அது நல்ல சாதிச் சேவல். எங்கட கோழிக்கு விட்டு அந்த முட்டையில அடை வைச்சா நல்ல குஞ்சுகள் வருமப்பா. சும்மா கறி சட்டி என்று விசர்க்கதை கதையாமல் சோமண்ணையட்டச் சொல்லிட்டு இஞ்சால துரத்தி விடுற வேலைச் செய்யுங்கோப்பா.

சரியடியப்பா. கொஞ்சம் பொறு. உவன் தம்பியின்ர கடிதம் வந்திருக்குப் போல வாச்சிட்டுப் போறன்.

என்ன தம்பின்ர கடிதமா. எப்பைங்க வந்தது. தபால்காரன் மணி அடிச்ச சத்தம் கேட்கல்லையே.

நான் றோட்டுக் கூட்டிக் கொண்டு நிண்டனான். அதுதான் அவன் தபால்காரப் பொடியன் கையில தந்திட்டுப் போட்டான்.

அப்படியே.. எங்க பிரிச்சுப் பெலத்தாப் படியுங்கோ கேட்பம். என்ர பிள்ளையின்ர கடிதம் கண்டு 6 மாசமாச்சு. பீ ஆர் (P.R) கிடைச்சிட்டு அம்மா என்று அப்ப எழுதினதுக்குப் பிறகு ஒரு கடிதமும் போடல்ல என்ர பிள்ளை.

சரி சரி உந்த புராணத்தை விட்டிட்டு கடிதத்தை வாசிக்கிறன் கேள்...

சரி வாசியுங்கோப்பா.. பெலத்தா.

"அன்புள்ள அம்மா அப்பாவிற்கு..

நான் இங்கு நலம். உங்கள் நலனிற்கு கடவுளை பிரார்த்திக்கிறேன்.

நான் இம்முறை எழுதும் விடயம் உங்களுக்கு அதிர்ச்சியை தரலாம். இருந்தாலும் எழுத வேண்டும் என்ற கட்டாய நிலையில் எழுதுகின்றேன்."

என்னவாம் அப்பா. தம்பி இப்படி எழுதி இருக்கிறான். ஏதேனும் பிரச்சனையோ என்ர பிள்ளைக்கு. கெதியா மிச்சத்தையும் வாசிங்கோப்பா.. கை கால் எல்லாம் பதறுது.

உன்ர அவசரத்துக்கு.. என்னால வாசிக்க ஏலாதடியப்பா. கண்ணு பூஞ்சு கட்டி கிடக்குது. இந்தா மிச்சத்தையும் வாசிக்கிறன் கேள்.

"அம்மா.. நான் சொல்லப் போகும் விடயம் உங்களை தான் அதிகம் பாதிக்கலாம். அதனால் தையிரியமா மனசை வைச்சுக் கொள்ளுங்கோ.

நான் ஊரில் இருந்த போது கோணேசர் மாமாவின் மகள் மஞ்சுளாவை காதலித்தேன் என்ற விடயம் அரசல் புரசலாக உங்களுக்கு தெரிய வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். கோணேசர் மாமா உங்கள் ஒன்றுவிட்ட தம்பி என்பதால் நிச்சயம் உங்கட காதுக்கும் அந்தச் செய்தி வந்திருக்கும். இருந்தாலும் இப்ப சொல்லுறன்.. நானும் அவரின்ர மகளும் காதலிச்சது உண்மை. அவளைக் கலியாணம் செய்வன் என்று சொன்னதும் உண்மை. ஆனால்.. இப்ப இங்க கனடாவில என்னோட இரவு விடுதியில் வேலை செய்யுற ரோஸ் மேரியைக் காதலிக்கிறன். அவளையே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எனது நிலை இப்போ இருக்கிறது.

அவளை ஓர் நாள் இரவு விடுதியில் சந்தித்ததில் இருந்து நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போது அவள் கர்ப்பமாக வேறு இருக்கிறாள். அதனால் திருமணத்திற்கு வற்புறுத்துகிறாள். இதற்கு மேலும் என்னால் அவளிற்கு சமாதானம் சொல்ல முடியாத நிலை எனக்கு இங்கு. அதனாலேயே இந்த முடிவை எடுத்துவிட்டு இக்கடிதத்தை சிரத்தையோடு எழுதுகிறேன்.

ரோஸ் மேரி ஒரு வெள்ளைக்காரப் பெட்டை. அவளின் பெற்றோர் பற்றி அவளுக்கு தெரியாது. அவள் பெற்றோரை விட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு இரவு விடுதியில் வேலை செய்து வந்தவள். அங்கே போன இடத்தில் எனக்கும் அவளுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு விட்டது. அதன் பின் அந்த விடுதியை விட்டுவிட்டு என்னோடு நான் வேலை செய்யும் விடுதியில் வேலை செய்து வருகிறாள்.

இந்த விடயத்தை கோணேசர் மாமாவிற்கும் மஞ்சுளாவிற்கும் எப்படியாவது சொல்லிவிடுங்கள்.

வேறு புதினம் இல்லை. கலியாணம் முடிந்த கையோடு படங்கள் அனுப்பி வைக்கிறேன்.

இப்போதைக்கு இந்த விடயத்தை கோணேசர் மாமா வீட்டுக்குத் தவிர வேறு எவருக்கும் சொல்ல வேண்டாம்.

இப்படிக்கு,
அன்பு மகன் முகுந்தன்."

என்னப்பா.. இது. இப்ப கோணேசருக்கு என்ன பதில் சொல்லுறது. அவர் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், நியூசிலண்ட் என்று அவள் மஞ்சுளாவுக்கு பேசி வந்த கலியாணங்களையும் இவனை நம்பி வேண்டாம் என்று போட்டு பெட்டையை காக்க வைச்சிருக்கிறார். அவளும் இவனையே நினைச்சுக் கொண்டு இருக்கிறாள். என்னப்பா செய்யுறது இப்ப.

என்னைக் கேட்டால் நான் என்னத்தையடிப்பா சொல்ல. உன்ரை பிள்ளை இப்படிச் செய்வான் என்று யார் கண்டது.

ஆமா அவன் காசு அனுப்பேக்க உங்கட பிள்ளை எண்டுங்கோ.. இப்ப பிரச்சனைக்க மாட்டிவிட்ட உடன என்ர பிள்ளை எண்டுங்கோ.

இஞ்ச பார்.. சரசு.. இந்த விசயத்தை கோணேசற்ர காதுக்கு போட சரியான ஆள் எங்கட சோமண்ணை தான். அவரட்ட போய் பேசிப் பாக்கிறனே.

அவன் தம்பி சொல்லுறான் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் என்று. நீங்க.. சோமண்ணைக்கு சொல்லுவம் என்றீங்கள்.

இல்ல சரசு.. அவன் தம்பின்ர கதையை விடு. அவனுக்கு இங்கத்தை நிலைமை தெரியாது. ஏற்கனவே கோணேசரும் வந்து சம்பந்தமும் பேசி முடிச்சிட்டுப் போயிட்டார். நாங்களும் சரி என்று சொல்லிப் போட்டம். இவன் முகுந்தன் வெள்ளைக்காரியோட போவான் என்று நாங்கள் என்ன சாத்திரமே பார்க்கிறது. இப்படியான நிலையில.. நாங்கள் நேர போய் கதைச்சா ஏமாத்திப் போட்டினம்.. தங்கட குமர் வாழ்வை பாழாக்கிப் போட்டினம் என்று கோணேசரும் மனுசியும் சும்மா இருக்குங்களே. அதுதான் சொல்லுறன் சோமண்ணையை அனுப்பி விசயத்தைச் சொல்லுவம்.. பக்குவமா என்று சொல்லுறன்.

நீங்க சொல்லுறது தாங்க சரி. அப்படியே செய்வம். நானும் வரட்டே.. சோமண்ணை வீட்ட.

நீயும் வந்தா நல்லம்.. தானே.

பொறுங்கோ.. உந்தச் சீலையை ஒரு சுத்து சுத்திட்டு ஓடிவாறான். உவன் தம்பி இப்படிச் செய்வான் என்று நான் கனவிலும் நினைக்கல்லங்க.

அதை விடடியப்பா. நடந்தது நடந்து முடிஞ்சுது. இப்ப ஆக வேண்டியதைப் பாப்பம். அதுசரி உந்தச் சேவலை என்ன செய்யுறது..

பெத்து வளர்த்ததே படி தாண்டிப் போட்டுது.. சேவலாம் சேவல். அது படுக்கைக்காவது மாமரத்துக்கு வரும். பேசாமல் இருங்கோ. விசரக் கிளப்பா. நான் இந்தா சீலையை சுத்திட்டு வந்திடுறன்.

சரியடியப்பா.. கெதியா வந்து சேர். நான் உந்தப் பின் கதவுகளைப் பூட்டிப் போட்டு வாறன்.

நானும் இந்தா ஓடி வந்திடுறன். நீங்கள் போய் பூட்டிக் கொண்டு வாங்கப்பா.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA