Monday 14 September 2009

இரவும் பகலும் துன்புறுத்தும் படையினர், எதிர்த்துப் பேசினால் துப்பாக்கியால் தாக்குதல்: முகாம் நிலை தொடர்பாக இளம் பெண் தகவல்

இரவும் பகலும் சிறிலங்காப் படையினரால் தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், முகாம்களில் உள்ள ஆண்கள் படையினரை எதிர்த்துப் பேசினால் துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
"எதற்காக நாம் இவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள்" எனவும் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு முகாம் நிலைமைகள் தொடர்பாக சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார்.

போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான போரின் பின்னரும் தான் உயிருடன் இருப்பதை ஒரு அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றார். இரண்டு வருட காலமாக இடம்பெற்ற கடும் மோதல்களில் துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் சீறிவரும் ஆட்டிலறிகளுக்கு மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்த சுகந்தினியின் மூன்று மைத்துனர்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொல்லப்பட்டனர்.

போர்ப் பிடியிலிருந்து தப்பிவந்த இவர், கடந்த நான்கு மாத காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறிய கூடாரங்களில், பங்கீட்டு உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரையும் அருந்திக்கொண்டு மக்களால் நிரம்பி வழியும், முட்கட்பி வேலிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினராலும் சூழப்பட்ட முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.

அரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் விடுதலையான இவர், திருகோணமலை துறைமுகத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாயாரின் அரவணைப்பில் தற்போதுள்ள இவரின், கணவர் தொடர்ந்தும் இந்த முகாம்களில் ஒன்றிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

"எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரல்ல. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் அவரது சொந்தக் கிராமம் என்பதால்தான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தரைப் படையினர் தெரிவிக்கின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டோம். ஆனால் இப்போது இல்லை. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" எனவும் சுகந்தினி தெரிவித்தார்.

வவுனியா முகாம்களில் உள்ள மூன்று லட்சம் இடம்பெயர்ந்த மக்களில் 5 வீதமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் சுகந்தினியின் சோகக் கதை போல பல கதைகள் இருக்க முடியும்.

தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் நிலை தொடர்பாகத் தெரிவித்த சுகந்தினி, "சாக்குளால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய கூடாரங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அதிகளவு மக்கள் இந்த முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. மலசலகூடங்கள் நிரம்பி வழிகின்றன. குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு உள்ளது. சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை. ஊடகவியலாளர்கள் இந்த முகாம்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை" எனக் குறிப்பிட்டார்.

மெனிக் பாம் தடுப்பு முகாமில் உள்ள ஒருவர் முகாம் நிலை தொடர்பாக செல்லிடப்பேசி மூலமாக தெரிவிக்கையில், முகாமில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தூக்கிச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம் என முகாமில் உள்ளவர்கள் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார். முகாமுக்குள் கடத்திச் செல்லப்பட்ட செல்லிடப்பேசி ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்த அவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

"நாம் அங்கு முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக யாருக்கும் சொல்வதற்கு மக்கள் அஞ்சுகின்றார்கள். ஆனால் இது ஒரு சிறைச்சாலையாகவே இருக்கின்றது. இங்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. அத்துடன் போதுமானளவு குடிநீரும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA