Monday 14 September 2009

இலங்கை அரசின் அடுத்த குறி, உருத்ரகுமாரன்? "அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார் அமெரிக்க அதிகாரி"


குமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயோர்க்கில் இருந்து கொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது
இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடன் நிறுவனத்தாரின் வார இதழான ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மேற்கண்டவாறு தகவல் வெளியாகியுள்ளது.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டிருப்பதாவது:-

கே.பி-'யை தலைவராக அறிவித்து பிரபாகரன் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத்தமிழர்களை தன் நாவன்மையால் வசீகரித்தவர் உருத்திரகுமாரன். 'இனி ஆயுதம் வேண்டாம்; அமைதிப் பேச்சு வார்த்தையே தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும்!' என்று கூறி இந்தியாவிடமும் நேசக்கரம் நீட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச கிரிமினல் கோர்ட்டிலும் இலங்கை அரசின் முகத்திரை கிழியக் காரணமாக இருந்தவரே இந்த உருத்திரகுமாரன். எனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்!'' என்று அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.

உருத்திரகுமாரனை உயிருடன் பிடிக்க இலங்கை அரசின் தீவிரவாதத் தடுப்புத் துறை பொலிஸார், இராணுவ அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றுள்ளது. கே.பி. ஸ்டைலில் அலேக்காக அவரை இலங்கைக்கு தூக்கிச் சென்று புலிகளின் சர்வதேசத் தொடர்புகளை விசாரிக்கத் திட்டமாம்.

'கே.பி.' மீது பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்ததால், கடைசி காலகட்டங்களில் அன்ரன் பாலசிங்கத்தின் அபிமானத்தைப் பெற்ற உருத்திரகுமாரனைத்தான் பிரபாகரன் வெகுவாக நம்பி வந்தார். புலம்பெயர்ந்த நாடுகளின் ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியும் கொடுக்கப்பட்டது.

வழக்கறிஞரான உருத்திரகுமாரன் தன் கூர்மையான வாதத்திறனால் புலிகளின் மீது அமெரிக்க அரசு விதித்திருந்த தடையை நீக்கப் போராடியும் வந்தார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலை பற்றியும் ஆதாரங்களுடன் பேசி அவர்களை மசிய வைத்தார். இதில் தொடங்கி ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஒபாமா வரை தமிழ் ஈழம் பற்றி பேசுமளவு செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக கனடா, ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி விஜயம் செய்து நாடு கடந்த தமிழ் ஈழம் ஆதரவாக மக்களைத் திரட்டியும் வந்தார். இது இலங்கைக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்து வந்தது. உருத்ராவை எப்படியாவது பிடித்துப் போட்டுவிட்டால்... புலிகளே இல்லாமல் செய்து விடலாம் என்று கணக்குப் போட்ட இலங்கை அரசு அவரைக் கைது செய்ய தனிப்படையே அமைத்தது.

இது பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதில், ''அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை...'' என்று கூறினார்கள். ''அமெரிக்கா ஒன்றும் மலேசியா இல்லை. இங்கு சட்டதிட்டங்களே வேறு. முதலில் ஓர் அமெரிக்க பிரஜையைக் கைதுசெய்ய சர்வதேச வாரண்ட் வேண்டும். அவர்மீது வழக்குப் பதிவாகி நீதிபதியின் தீர்ப்பு நகலை முதலில் தரவேண்டும். முக்கியமாக அந்நாட்டுடன் 'நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம்' (EXTRADITION TREATY) அமுலில் இருக்கவேண்டும். இலங்கையிடம் அமெரிக்காவுக்கு அப்படி ஒரு ஒப்பந்தமோ வாக்குறுதியோ இல்லை.

கே.பி. கைது வேறு கதை! அவர் இண்டர்போல் அமைப்பினால் தேடப்பட்ட சர்வதேசக் குற்றவாளி. ஆகவே, மூன்று நாடுகளைக் கடந்து கடத்திப் போக முடிந்தது. எங்களுக்குத் தெரிந்த வரை உருத்திரகுமாரன் மீது எவ்வித வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை கைது செய்வதானால் முதலில் எங்கள் அனுமதி பெறவேண்டும். அமெரிக்காவின் தனிமனித சுதந்திரம் மிகவும் போற்றப்படக் கூடியது!'' என்று கூறினார்கள்.

உருத்திரகுமாரனின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசே கூட மிகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தாலும், அவர் மீது தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இவ்வளவுக்கும் நியூயோர்க் மாநகரில் பிரபாகரன் படம், புலிக்கொடி ஏந்தி பத்தாயிரம் ஈழத்தமிழர்களை வைத்துப் பேரணியைப் நடத்தியவர் உருத்திரகுமாரன்.

உருத்திரகுமாரனையும் சேர்த்து நான்கு தலைவர்களை இலங்கை அரசு 'கைது' செய்யத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் லண்டனில் வாழும் அடேல் பாலசிங்கம், கலிபோர்னியாவில் வாழும் ஜெயந்தா டொனால்டு ஞானக்கோன் மற்றும் ஐரோப்பாவிலுள்ள காஸ்ட்ரோ ஆதரவாளரான நெடியவன்.

அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி அடேல், பல்வேறு குழுக்களாக உள்ள தமிழ் ஈழத் தலைவர்களை தனது அன்பினால் தாயைப்போல் உரிமையுடன் கண்டித்து ஒருங்கிணைத்தார். லண்டனில் எந்த ஆர்ப்பாட்டம் என்றாலும் முதலில் நிற்பார். இவரது சக்தி வெள்ளையர்களை புலிகளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஞானக்கோன் ஒரு விமான பைலட். முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர். கலிபோர்னியாவில் வாழும் இவர் புலிகளுக்கு ஆயுத விநியோக முகவர் என்று கூறுகிறது இலங்கை அரசு. லக்ஷ்மன் கதிர்காமர் கொலையிலும் இவரை வளைத்துப்போடப் பார்க்கிறது. ஆனால், எதற்கும் அஞ்சாதவர் ஞானக்கோன். ''என்னைப் பிடிப்பதற்குள் அவர்களைத் தீர்த்து விடுவேன். அமெரிக்காவில் உயிரை காப்பாற்றிக் கொள்ளக் கொன்றால் குற்றமில்லை!'' என்று சிரிக்கிறார் அவர்.

இலங்கையில் விழுந்த பிணக் குவியல்களையும், நிகழ்ந்த பட்டினிச் சாவுகளையும் கண்டு கொதித்ததோடு... பிஞ்சுக் குழந்தைகளை வதைமுகாம்களில் அடைத்துக் கொடுமை செய்ததை அமெரிக்காவில் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்தவர் உருத்திரகுமாரன். கழிப்பிடம் இல்லாத பெண்களும், கஞ்சி இல்லாத குழந்தைகளையும் கண்டு அமெரிக்க அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான 'சனல்-4' வெளியிட்ட பயங்கரமான காட்சிகளைக் கண்டு உலகமே அதிர்ந்தது. அதே சனல், எப்படி அப்பாவி மக்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் என்றும் காட்டியது. ஐக்கிய நாடுகள் இந்த வீடியோக்களை மிக மிக சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது. இதனால், கடுப்பாகிப்போன இலங்கை அரசு, கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில் உருத்திரகுமாரனை போட்டுத் தள்ளவும் தயாராகி வருகிறது என்கிறார்கள்.

'என் தந்தை யாழ் மாநகரின் மேயராக இருந்தவர். எனக்கு அந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் உள்ள பிணைப்பை என்ன பயமுறுத்தினாலும் போக்கி விட முடியாது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் உலகம் முழுவதும் இப்போது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது. என்னை அவர்கள் அழிக்கப் பார்ப்பது உண்மைதான்! என் உயிரைப்பற்றி கவலைப்படுகிறவன் இல்லை நான். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பற்றித் தான் கவலைப்படுகிறேன்'' என்று நறுக்கென்று இதற்கு பதில் தருகிறார் உருத்திரகுமாரன்.
-

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA