Thursday 13 August 2009

உலகமே எதிர்த்தாலும் உரிமைக்குரல் ஓயாது...

ஈழ விடுதலைப்போராட்டத்தின் இருப்பினை அடியோடு அழித்துவிடவேண்டும் என்பதில் வெறித்தனமாகச் செயற்படும் சக்திகளின் சதியால் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயலாளர் நாயகம் பத்மநாதன் அவர்கள் அண்மையில் கைதாகிக் கடத்தப்பட்டிருப்பதன் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பும் விடிவுக்கான போராட்டமும் எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்ற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுந்துள்ளது.

"சிறிலங்காவில் புலிப்பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு உயிர்ப்பளிக்கும் செயற்பாடு உலகின் எந்த மூலையில் நடைபெற்றாலும் அதைத் தேடிச்சென்று நசுக்கும் வல்லமையுடன் சிறிலங்கா அரசு உள்ளது" - என்று பத்மநாதன் அவர்களின் கைதின் பின்னர் பேசிய சிறிலங்கா அரசின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்குப் பயங்கரவாத முலாம் பூசியது மட்டுமல்லாமல், அந்தப் போராட்ட உணர்வுடன் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் செயற்பாடுகளுக்கும் சிறிலங்கா அரசு சவால் விடுத்திருக்கிறது.
தனது நாட்டில் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு வீடு வீடாகச் சென்று அப்பாவித் தமிழ்மக்களை வெள்ளைவானில் கடத்திச் செல்வது போல வெளிநாடுகளிலும் வந்து தமது கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சக்தி தமக்கு இருப்பதாக மார் தட்டியிருக்கிறது சிங்களதேசம். இதன்மூலம், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் என்ற மாபெரும் சக்தியை மிரட்டி அடிபணியவைக்க முயற்சி செய்திருக்கிறது.

தற்போது சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள்?

அதேவேளை, இந்த எதிர்நடவடிக்கைகளுக்குச் சமாந்தரமாக தாயகத்தில் உள்ள மக்களின் விடிவுக்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறார்கள்?


இன்றைய நிலையில் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்வாழ்வு எனப்படுவது சிங்களப் படைகளின் கைகளின் அகப்பட்ட சீரழிவாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்குரிய உதவிகள் சீராகச் சென்றடைவதை உறுதி செய்துகொள்ளும் பணியைப் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தம்மால் இயன்றளவு செய்துவருகிறார்கள். இந்தப்பணி தனிப்பட்ட ரீதியிலும் கட்டமைப்புகள் ஊடாகவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப்பணியின் தொடர்ச்சி அவசரமானதும் அத்தியாவசியமானதும்கூட.

இதற்கு அப்பால், தமிழ் மக்களின் அரசியல்வேலைத்திட்டங்கள் சமாந்தரமாக மேற்கொள்ளப்படுவதும் இன்றைய வரலாற்றுத்தேவையாக உள்ளது. பத்மநாதன் அவர்களின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான பூர்வாங்கவேலைத்திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்திருக்கிறார்.


தமிழினத்தின் குறியீடுகளாக முன்னின்று பணிபுரிபவர்களைக் கைது செய்து அடைத்துவைப்பதாலோ அவர்களைக் கொன்றொழித்துவிடுவதாலோ பன்னெடுங்காலமாக தமிழ்மக்களின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் விடுதலைத்தீயை அணைத்துவிடமுடியாது.

சுதந்திரத்திற்கான தாகத்துடனும் ஏக்கத்துடனும் உள்ள ஓரினத்தின் உணர்வை எந்த அடக்குமுறையாலும் அழித்துவிடமுடியாது என்ற கருத்தினை உருத்திரகுமாரன் அவர்கள் மீளவும் உறுதியாகக் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்துவாழும் மக்களின் இந்தக் கருத்தோட்டத்துக்கு வலுச்சேர்த்தாற்போல் - பத்மநாதன் அவர்களின் கைதுக்குப் பின்னர் இடம்பெற்ற - வடக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழர்சேனையை அழித்து அவர்களின் ஆயுதப்போராட்டத்தை அடியோடு ஒழித்து சலுகைகளை அள்ளிவீசிவிட்டால் அல்லது அடக்குமுறையைப் பிரயோகித்தால் தமிழ்மக்கள் உரிமைகளை மறந்துவிடுவார்கள் என்று சிறிலங்கா அரசு போட்ட கணக்கு பொய்த்துப்போயிருக்கிறது. தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் அடிப்படைக்கோட்பாடுகளைத் தாங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச்செய்து வடக்கு மக்கள் தமது தீர்ப்பினை வழங்கியிருக்கிறார்கள்.

தமி்ழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கையில் -

"தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இது எங்களால் பெற முடியாதது இல்லை. தனித்துவமான வகையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்குச் சகல அதிகாரங்களுடனுமான முழுமையான சுயாட்சி வழங்கப்பட வேண்டும்.

"காணி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கைத்தொழில்கள் அனைத்தும் உள்ளடங்கிய ஆட்சி எமது மக்களின் கைகளில் இருக்க வேண்டும். இவற்றை நிர்வகிப்பதற்கான நிதியை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் திரட்டுவதற்கு அனுமதி இருக்க வேண்டும்.

"இனப்பிரச்சினைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்ற தீர்வுத் திட்டம் இதுவே ஆகும்" - என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆகவே, இனிவரும் காலப்பகுதியில் தாயகத்தில் ஏற்படக்கூடிய வலுவான தமிழர்களின் அரசியல் தளத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் புலம்பெயர்ந்துவாழும் மக்கள், கட்டமைப்பு ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்ளவேண்டும். அதற்கான முயற்சி தற்போது மிகப்பெரியளவில் வெற்றியைக் கண்டிருக்கிறது.
புலம்பெயர்ந்துவாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தமிழ்அமைப்புக்களும் அந்தந்த நாடுகளில் ஒரு குடையில் திரண்டிருக்கின்றன. செயற்பாட்டு ரீதியில் தமக்கிடையில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் கொள்கைரீதியில் தாம் ஒன்றிணைந்த சக்தியே என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அவை ஒருகோட்டில் நின்று பணிபுரியத் தயாராகியிருக்கின்றன.

இந்த ஒரு பலமான தளம் இனிவரும் காலத்தில் தாயகத்தில் அரசியல் ரீதியான கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் ஆதாரசக்தியாகச் செயற்படும் அதேவேளையில், அதன் ஏனைய கட்டமைப்புகள் ஊடாக அங்குள்ள மக்களுக்குப் பணிபுரியும் ஓர் அரசாகவும் செயற்படப்போகிறது. இதன்செயற்பாடுகள் பலதுறைகளிடமும் ஆலோசனைகளைப் பெற்று இயங்கும் அரசின் செயற்பாடுகளாக அமையப்போகின்றன. தேசியத்தலைவரின் வழிகாட்டுதலுடன் கட்டமைப்பு ரீதியில் அனைத்துத் துறைகளிலும் தமிழர்தாயகம் வளர்ச்சிபெற்று தமிழீழத் தனியரசாக எவ்வாறு கௌரவத்தோடு நிமிர்ந்துநின்றதோ, அந்தக் கட்டமைப்புக்களை மீண்டும் உருவாக்கவேண்டிய பொறுப்பும் நாடு கடந்த தமிழீழ அரசின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இந்தப் பணிகள் அனைத்துக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய நாடுகடந்த தமிழீழ தனியரசுக்கு பாரெங்கும் பரந்துவாழும் தமிழ்உறவுகளின் ஓருமைப்பாடு மிகவும் அத்தியாவசியமானது. இன்றையநிலையில் அது கட்டாயக் கடமையாகிறது. இதன்தேவை அனைத்துமட்டத்திலும் உணரப்பட்டு அது செவ்வனே செயற்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், அதன் தொடர்ச்சிதான் சிங்களதேசத்தின் எதிர்நடவடிக்கைகளுக்குப் பதிலடிகொடுக்கக்கூடிய பலமாக இருக்கும்.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA