விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட போர்க்காட்சிகளைக் கொண்ட அனைத்து வீடியோ ஒளிப்பதிவு நாடாக்களையும் உடனடியாக தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் தொலைக்காட்சிப் பணிப்பாளர்களுக்கு ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா உத்தரவிட்டுள்ளார்.
வன்னியின் இறுதிப் போர்க்களத்தில் எடுக்கப்பட்ட ஓளிபரப்பப்பட்ட மற்றும் ஒளிபரப்பப்படாத அனைத்து வீடியோ ஒளிப்பதிவு நாடாக்களையும் இந்நிறுவனங்களின் பணிப்பாளர்கள் உடனடியாகத் தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
அமைச்சரின் இந்த திடீர் உத்தரவு அண்மையில் சனல் 4, அல்ஜசீரா, பி.பி.ஸி, சி.என்.என் உட்பட பல்வேறு தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்ட நிராயுதபாணியான, நிர்வாணமாக்கப்பட்ட இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் கூட்டுப் படுகொலை செய்வதான வீடியோ நாடாவுடன் தொடர்புபட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது அரச ஊடகங்களான ரூபவாஹினி மற்றும் ஐரிஎன்க்கு மட்டுமே விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது அப்பகுதிகளுக்குச் செல்லவும் அவற்றைப் படம் பிடிக்கவும் அறிக்கையிடவும் அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.