Tuesday 11 August 2009

புலிகளின் சர்வதேச வலையமைப்பை இலக்கு வைத்துள்ள இலங்கை அரசு


விடுதலைப்புலிகளை உள்நாட்டில் அழித்துவிட்ட இலங்கையரசு தற்போது வெளிநாடுகளில் செயற்பட்டு வரும் விடுதலைப்புலிகளையும் பிணமாக்கும் அல்லது கைது செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருப்பது விடுதலைப்புலிகளின் புதிய தலைவரான கே.பி. கைது செய்யப்பட்ட முறை மூலம் தெளிவாகியுள்ளது.

கே.பி.யை கைது செய்வது எமது நோக்கமல்ல சுட்டுக்கொல்வதே திட்டம். அதற்காகவே மூன்று நாடுகளுக்கு இலங்கையிலிருந்து விசேட புலனாய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக ராய்ட்டர் செய்திச்சேவைக்கு தகவல் வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளதன் மூலம் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் பிரமுகர்கள் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளையும் அதன் தலைமைத்துவத்தையும் நந்திக் கடலோரத்தில் வைத்து அழித்ததன் மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்த இலங்கையரசு கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதனை மலேசியாவில் வைத்து கைது செய்ததன் மூலம் புலிகளின் சர்வதேச வலையமைப்பையும் தகர்த்துள்ளது.

கடந்த மே 18ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததுடன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த போதும் புலிகளின் மிகப் பலம் வாய்ந்த சர்வதேச வலையமைப்பு இலங்கையரசுக்கு சவாலாக திகழ்ந்ததுடன் புலிகளை மீண்டும் அணி சேர்த்தல், நாடு கடந்த தமிழீழ அரசு அமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதனால் இலங்கையரசிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்தது.

இவ்வாறான நிலையிலேயே விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கடத்தல் தலைவரும் பின்னர் பிரபாகரனால் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டவரும் பிரபாகரனின் மறைவையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவராக நியமனம் பெற்றவருமான கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனை யாரும் எதிர்பாராத விதமாக மலேசியாவில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளது இலங்கையரசு.

கே.பி.யின் கைது குறித்து அறிவித்துள்ள இலங்கையரசு அவர் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார், எவ்வாறு, யாரால் கைது செய்யப்பட்டார் என்பன போன்ற விபரங்களை வெளியிட மறுத்துள்ளதன் மூலம் இக் கைதின் பின்னணியில் ஒன்றுக்கு மேற்பட்ட சக்திகள் இருப்பது புலனாகியுள்ளது.

தாய்லாந்தில் பாங்கொக் நகரில் வைத்த கே.பி. கைது செய்யப்பட்டதாக இலங்கையரசு செய்திகளை முதலில் கசியவிட்டது. ஆனால், அதனை உடனடியாகவே தாய்லாந்து அரசு மறுத்துவிட்டது. அத்துடன் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்த தென்கிழக்காசிய நாடொன்றில் வைத்த கே.பி. கைது செய்யப்பட்டதாக இலங்கையரசு கூறியது.

ஆனால், கே.பி.கடந்த புதன்கிழமை மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியில் இருக்கும் டியூன் ஹாட்டலில் வைத்தே கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் சார்பு இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டனிலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசனின் சகோதரரையும் நடேசனின் மகனையும் சந்திப்பதற்காக அந்தக் ஹோட்டலுக்கு சென்று அவர்களுடன் அறையொன்றில் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு அறைக்கு வெளிய வந்த நேரத்திலேயே கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அந்த இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

தம்முடன் உரையாடிக் கொண்டிருந்தபோது கே.பி.யின் செல்போனுக்கு வந்த அழைப்பொன்றையடுத்து தனிமையில் உரையாடுவதற்காக ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பாததையடுத்து நடேசனின் சகோதரரும் நடேசனின் மகனும் வெளிய வந்து தேடியபோதே அவர் கடத்தப்பட்டமை தெரிய வந்ததாகவும் புலிகள் சார்பு இணையத்தளங்கள் கூறுகின்றன.

அத்துடன், மலேசிய புலனாய்வுத்துறையின் உதவியுடனோ அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடனோதான் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கே.பி. கடத்தப்பட்டு பின்னர் பாங்கொக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்த இணையத்தளங்கள் குற்றம் சாட்டுகின்றன.

தமது நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழ்வதால் தமக்கு சிக்கல்கள் வந்துவிடக்கூடாதென மலேசிய அரசு விடுத்த வேண்டுகோளினாலேயே இக்கைது சம்பவத்துடன் மலேசிய புலனாய்வுத்துறை, பாதுகாப்புத்துறையினருக்கு இருக்கும் தொடர்பை மறைத்து அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பும் நோக்குடன் கே.பி.யை தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்ததாக முதலில் இலங்கையரசு அறிவித்திருந்தது.

இலங்கை அரசின் இந்த அறிவிப்பை உடனடியாகவே மறுதலித்த தாய்லாந்தின் பிரதமர் சப்சிட் வெஜ்யஜிவா கே.பி. தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லையென்பதை தம்மால் உறுதிப்படுத்த முடியுமெனவும் அவர் வேறு ஒருநாட்டில் வைத்த கைது செய்யப்பட்டிருப்பதாக தம்மால் உறுதியாக கூறமுடியுமெனவும் தெரிவித்தார். இதையடுத்த பாங்கொக் என்பதை மாற்றி தென்கிழக்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்ததாக பின்னர் இலங்கையரசு அறிவித்தது.

கே.பி.யை சுட்டுக் கொல்வதே திட்டம்

இதேவேளை, கே.பி.யை கைதுசெய்வது தமது திட்டமல்லவெனவும் அவரை சுட்டுக்கொல்வதே தமது? நாக்கமாக இருந்ததெனவும் ஆனால் அது கைகூடாமல் போய்விட்டதாகவும் இலங்கை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடவிரும்பாத மூன்று அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


ராய்ட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ள அந்த செய்தியில் அந்த மூன்று அதிகாரிகளும் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ள விபரம் வருமாறு,

"நந்திக் கடலோரத்தில் பிரபாகரனின் உடலுக்கருகிலிருந்து கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியில் காணப்பட்ட இன்னொரு செய்மதி தொலைபேசி இலக்கத்தை வைத்தே நாம் கே.பி.யின் நடமாட்டத்தை அறிந்து கொண்டோம். ஆசிய நாடொன்றில் அவர் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு இலங்கையிலிருந்து மூன்று விசேட புலனாய்வுப் பிரிவினர் அனுப்பப்பட்டனர். கே.பி.யை கைது செய்வது எமது நோக்கமல்ல. அவரை சுட்டுக்கொல்வதே திட்டம். ஆனால், இறுதி நேரத்தில் அவரைக் கொல்லும் திட்டம் மாற்றப்பட்டு கைது செய்யுமாறு மேலிடம் உத்தரவிட்டது.

ஏனெனில், அவரை சுட்டுக்கொல்ல போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்ற அங்கிருந்த சூழ்நிலை இடமளிக்கவில்லை. அங்கு எமது ஆட்களுக்கு ஒத்துழைப்பாக செயற்பட்ட உள்ளூர் புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரசன்னம் அந்தத் திட்டத்தை நடைமுறைச் சாத்தியமற்றதாக்கிவிட்டது. அதனாலேயே இறுதி நேரத்தில் கைதுசெய்ய வேண்டி ஏற்பட்டது.

அத்துடன், நாங்கள் இப்போது வெளிநாடுகளில் ஆயுதக் கொள்வனவு, புலனாய்வு விடயங்களை சேகரித்துவரும் "காஸ்ரா' போன்ற விடுதலைப்புலிகளின் எஞ்சியிருக்கும் ஏனைய தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் தேடி வருகின்றோம். அவர்களும் விரைவில் அகப்படுவார்கள்'.

ராய்ட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி பார்த்தால் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள், முக்கியஸ்தர்களின் உயிர்களுக்கு எவ்வேளையிலும் ஆபத்து நேரலாம். அவர்களை கைது செய்யவோ அல்லது சுட்டுக் கொல்லவோ? தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

புலிகளை முடிக்க வேண்டுமானால் முதலில் மூவரின் கதைகளை முடிக்க வேண்டும். ஒருவர் பிரபாகரன், இன்னொருவர் பொட்டம்மான், அடுத்தவர் கே.பி. இந்த கே.பி. என்பவரே மற்றைய இருவரையும் விட மோசமானவரென பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசகரும் பயங்கரவாத தடுப்பு நிபுணருமான பேராசிரியர் ரொகான் குணரட்ன அடிக்கடி கூறிவந்ததாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அந்தளவுக்கு சர்வதேச மட்டத்தில் பலமும் செல்வாக்கும் மிக்கவராக கே.பி. திகழ்ந்தார். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உட்பட ஆசிய நாடுகளுடனான கே.பி.யின் தொடர்பு நிலை மிகவும் பலம் வாய்ந்தது. அரசியல் உயர்மட்டங்களுடன் கே.பி.க்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன.

விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை இழந்த பின்னர் 30.01.2009 அன்று விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளராக பிரபாகரனால் கே.பி.நியமிக்கப்பட்டார். கே.பி. என்றால் குமரன் பத்மநாதன் என்ற பெயரே அறியப்பட்டதாக இருந்த நிலையில் செல்வராஜா பத்மநாதன் என்ற பெயர் அறிவிக்கப்பட்டமை யாரோ புதியவர் என்ற குழப்பத்தை முதலில் ஏற்படுத்திய போதும் அது பின்னர் கே.பி.தான் என்பது உறுதியானது.

இதன் பின்னர் வன்னியில் இடம்பெற்ற நிகழ்வுகள் கே.பி.யை சர்வதேச மட்டத்தில் பரபரப்புடையவராக்கியது. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை காப்பாற்றுவதற்காக கே.பி. பெரும் பிரயத்தனப்பட்டார். இறுதியில் தமது ஆயுதங்களை மௌனமாக்குவதாக பிரபாகரன் கே.பி. மூலம சர்வதேசத்திற்கும் உலகத் தமிழர்களுக்கும் அறிவித்தார்.

அதன் பின்னர் வன்னியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் உண்மைத் தன்மைகளை அறிந்த ஒருவராக கே.பி.யே இருந்தார். கடந்த மே 18 ல் நந்திக் கடலோரத்தில் பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்களிடைய ஏற்பட்ட குழப்பங்களை, வாதப்பிரதிவாதங்களை கே.பி. பெரும் பிரயத்தனங்களின் மத்தியில் தீர்த்து வைக்க வேண்டியேற்பட்டது. இதன்போது பிரபாகரனைக் காட்டிக்கொடுத்தவரென்ற துரோகப் பட்டம் கூட கே.பி.க்கு கிடைத்தது.

தமிழகத்தைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்களான விடுதலைப்புலிகளின் மதிப்புக்குரிய பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்கள்கூட? கே.பி.யை துரோகியென குற்றம் சாட்டினர். புலம்பெயர் தமிழர்கள் கே.பி.க்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டுபட்டு நின்றனர். இதனால் பிரபாகரனின் மறைவுக்கு கூட சர்வதேச மட்டத்தில் ஒரு அஞ்சலி நிகழ்வைக் கூட நடத்த முடியாத நிலை? கே.பி.க்கு ஏற்பட்டது.

இறுதியில் தான் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவன் என்பதை நிரூபித்த கே.பி. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக இறங்கினார். முதலில் விடுதலைப்புலிகள், ஆதரவாளர்களை ஒன்றுசேர்க்கும் பணியில் ஈடுபட்ட கே.பி. அதில் வெற்றியும் கண்டார். சர்வதச நாடுகளில் செயற்பட்டுவரும் தமிழர் நலன்சார் அமைப்புகளையும் ஒன்று சேர்த்தார்.

வெளிநாடுகளிலுள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க அறிவிப்பை கே.பி. வெளியிட்டார். இந்த அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் உடைந்து போயிருந்த தமிழர்களை மீண்டும் ஒன்று சேர்க்க உதவியது. இதையடுத்து நாடுகடந்த அரசை நிறுவும் பணிக்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
இதையடுத்த விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக அனைவராலும் க.பி. ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில் விடுதலைப்புலிகளை இலங்கையில் அடியோடு கருவறுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகவிருந்த இலங்கையரசு சர்வதேச மட்டத்திலும் புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒடுக்கும் திட்டத்தையும் முன்னெடுத்தது.

கே.பி.யையும் அவரின் செயற்பாடுகளையும் முடக்க வேண்டுமென்பதில் தீவிர அக்கறை காட்டிய இலங்கையரசு கே.பி.யை விரைவில் பிடிப்போம் என்று அடிக்கடி சூளுரைத்தும் வந்தது. ஐந்து பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்டர்போலுக்குத் தண்ணி காட்டி வந்த கே.பி.யை இலங்கையரசினால் நெருங்கக்கூட முடியாதென்ற கருத்தே பலமாகவிருந்தது.

நூற்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருந்த கே.பி. பல்வேறு அடையாளங்களுடன் லெபனான், தாய்லாந்து, மலேசியா, மியன்மார், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, கொங்ஹொங், கம்போடியா, பிரான்ஸ், பிரிட்டன், சுவீடன், கிறீஸ், சைப்பிரஸ், தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தங்கியிருந்துள்ளார்.

பல நாடுகளில் தங்கியிருந்தாலும் கே.பி.க்கு வெளியாருடன் தொடர்பு கொள்ளவேண்டிய தேவைகள் இருக்கவில்லை. அதேபோல் எதிராளிகளும் இருக்கவில்லை. ஆனால், விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்துக்கு ஏற்பட்ட அழிவையடுத்து அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தனது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது வெளியில் நடமாட வேண்டிய தேவை கே.பி.க்கு ஏற்பட்டது.

இந்த நிலையே இலங்கை புலனாய்வுத்துறையின் கழுகுக் கண்களில் கே.பி.யை காட்டிக் கொடுத்தது. அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைமையின் அழிவின் பின்னர் கே.பி.யுடன் முரண்பட்டு நிற்கும் எதிராளிக் கோஷ்டிகளின் ஒத்துழைப்பும் இலங்கை புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்திருக்கலாமென புலிகள் சார்பு இணையத்தளங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் புலிகளையும் அதன் தலைமையையும் முற்றாக அழித்தது போல் சர்வதேச மட்டத்திலும் புலிகளின் வலையமைப்பை அழிப்போம் என இலங்கையரசு சூளுரைத்திருந்தது. தற்போது கே.பி. கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் செயற்பாடுகளை இலங்கையரசு சிதறடித்துள்ளது. இனி சர்வதேச மட்டத்தில் கூட புலிகளால் செயற்படமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் அழிக்கப்பட்டாலும் அதன் சர்வதேசக் கட்டமைப்பு தொடர்ந்தும் ஆபத்தானதாகவே விளங்கியது. வெளிநாடுகளில் உள்ள புலிகளின் பிரமுகர்களை "புலிகளின் எச்சங்கள், அல்லது மிச்சங்கள்' என்றழைக்கும் போக்கு தற்போது தென்பகுதி ஊடகங்களில் காணப்படுகின்றது. ஆனால், இவை நினைப்பதுபோல் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு பலவீனமானதாக இருக்கவில்லை. உறுதியானவையாகவே இதுவரை காணப்பட்டன. ஆனால், கே.பி.யின் கைதின்பின் அந்நிலை மாற்றமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ள தலைவர்களில் மூத்தவராகவும் திறமைசாலியாகவும் இருப்பவர் கே.பி. மட்டுமே. புலிகளின் அசுர வளர்ச்சிக்கு அவர்களின் சர்வதேச கட்டமைப்பே பிரதானமாக விளங்கியது. அந்த கட்டமைப்பை கே.பி.யே வழிநடத்தினார். பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் புலிகளின் தலைவராக கே.பி. அறிவிக்கப்பட்டு இவரது தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற நோக்கில் விடுதலைப்புலிகள் இயக்கம் அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ள வேளையிலேயே கே.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகின்ற போதும் இக் கைது நடவடிக்கையில் இன்டர்போலின் தொடர்பிருப்பதாகவும் சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. கே.பி.யை "இன்டர் போலா'ல் கைது செய்யப்பட்டு அதன் பின்னரே இலங்கை புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கே.பி. தொடர்பாக இலங்கையின் சட்டம் தனது நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அதேவேளை, சர்வதேச விதிமுறைகள் பேணப்படும் என்றும் கே.பி. இந்தியாவில் தேடப்படும் ஒருவராக இருப்பதால் இந்தியா அவரை கேட்கும் பட்சத்தில் சர்வதேச உடன்படிக்கைகள், விதிகள் மற்றும் சாசனங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கே.பி. இன்டர்போலால் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் நபர். இவரைப் பிடிக்க ஐந்து தடவைகள் இன்டர்போல் "ரெட் அலர்ட்' பிறப்பித்திருந்தது. அத்துடன் இந்தியாவின் சி.பி.ஐயும் இவரைத் தேடி வந்தது. இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையுடன் இவருக்கு நேரடித் தொடர்புகள் இல்லாவிட்டாலும் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் 5 நாட்கள் கழித்து மும்பை வழியாக இந்தியாவிலிருந்து கே.பி. தப்பிச் சென்றதாக சிபிஐ கூறுகிறது.

இன்டர் போல் ஒருவரை கைது செய்தால் எந்தநாட்டில் வைத்து அவரை கைது செய்கின்றனரோ அந்த நாட்டில் வைத்தே விசாரிப்பார்கள். அல்லது வழக்கின் முக்கியத்துவம் கருதி இன்டர்போல் தலைமையகம் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு சென்று விசாரிப்பார்கள். அல்லது கைது செய்யப்படும் நபர் எந்த நாட்டு அரசால் தேடப்படுகின்றாரோ அந்த அரசு முறைப்படி தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டால் சர்வதேச விதிகளுக்கமைவாக அவரை ஒப்படைக்கலாம் அல்லது ஒப்படைக்காமலும் விடலாம்.

2007ஆம் ஆண்டு கே.பி. பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து அவரைத் தேடி இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குழு தாய்லாந்து சென்று கே.பி.யை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியமை நினைவிருக்கலாம். ஆனால், அவ்வாறு யாரும் கைது செய்யப்படவில்லையென தாய்லாந்து காவல்துறை மறுத்திருந்தமையும் நினைவிருக்கலாம்.

ஆனால், தற்போது கே.பி. யாரால், எங்கு வைத்து, எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்ற விடயத்தை இலங்கையரசு தெரிவிக்க மறுத்து வருகின்றது. இந்தக் கைது நடவடிக்கைக்கு இன்டர்போலின் நெருங்கிய ஒத்துழைப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறானால் சட்டவிதிகளை மீறியே கே.பி. இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எங்கு வைத்து, எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது முக்கியமல்ல. கே.பி. கைது செய்யப்பட்டுள்ளார் என்பதே முக்கியமென இலங்கையின் பாதுகாப்பு பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கையரசைப் பொறுத்தவரையில் கே.பி.யின் கைது புலிகளின் சர்வதேச கட்டமைப்பை உடைத்தெறிவதில் பெற்ற வெற்றியாகவேயுள்ளது.

கலைஞன்

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA