Tuesday 11 August 2009

ஈழப்போரின் உயிர்த்துடிப்பை உறுதி செய்த வரலாற்று தீர்ப்பு


.யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கு சிறிலங்கா அரசு அவசர அவசரமாக நடத்திய தேர்தலில் பங்குகொண்ட மக்கள் தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடி இன்னமும் துடிப்புடன் இருப்பதை உறுதிசெய்துள்ளார்கள். தமது உரிமைகளுக்கான பேரவாவையும் அதற்கு தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் மீண்டுமொரு தடவை சிறிலங்கா அரசின் ஊடாக சர்வதேச சமூகத்துக்கும் எடுத்து கூறியுள்ளனர்.

போர் முடிவடைந்ததாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில் பல இலட்சக்கணக்கான மக்களை முகாம்களிலும் திறந்த வெளிச்சிறைகளிலும் வைத்திருந்தபடி - அந்த மக்கள் அடுத்த நேர உணவுக்கு மன்றாடிக்கொண்டிருக்க - தான் நினைத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை மக்கள் மீது திணித்து, தனது அதிகார ஆக்கிரமிப்பை நிலைநாட்ட முயன்ற சிங்கள அரசுக்கு தற்போது கிடைத்திருப்பது தோல்வியே ஆகும்.

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலை எடுத்து நோக்கினால், அங்கு 13 ஆசனங்களைப் பெற்று ஆளும் அரச கட்சியுடன் இணைந்த கூட்டணி வெற்றி பெற்றிருப்பினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. 23 ஆசனங்களுக்கான இந்தப் போட்டியில் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற பெருவிருப்புடன் அரசு நடத்திய நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

குடாநாட்டுக்கும் கொழும்புக்குமான ஏ-9 பாதையைத் திறந்தது. தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்னர் என்று பார்த்து வவுனியா முகாமிலிருந்த மக்களில் ஒரு தொகுதியினரை விடுவித்தது. குடாநாட்டில் பாரிய களியாட்ட நிகழ்வுகளை நடத்தியது. அங்கு 16 பெரிய திரையரங்குகளை திறக்கப்போவதாக அறிவித்தது.

இவ்வாறாக சலுகைகளைக் கொடுத்து உரிமைகளை மறக்கசெய்து அந்த மாயையில் மக்கள் மயக்கமுற்றிருக்கும்வேளை பார்த்து தனது 'அரசியல் திருக்கூத்தை' அரங்கேற்றிவிடலாம் என்று அரசும் அதனுடன் இணைந்த துணைக்குழுவினரும் பெரும்திட்டம் தீட்டினர். அரசுத்தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்சவும் துணைக்குழு தலைவரும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கடந்த சில மாதங்களாகவே கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு இந்த 'தேர்தல் வியாபாரத்தை'ச் செவ்வனே நடத்தி முடிக்கவேண்டும் என்று பெரும்பிரயத்தனம் செய்தனர்.

ஆனால், பெற்றுக்கொண்ட ஆசன எண்ணிக்கைகள் அவர்களுக்கு 'ஆறுதல்பரிசு' போன்றதே தவிர, தமிழ் மக்களின் எண்ணங்களில் என்றுமே ஜீவனாக உள்ள உரிமைபோராட்ட உணர்வை அழித்துவிடவேண்டும் என்ற அவர்களின் நீண்டகாலத்திட்டத்துக்குப் பலத்த பதிலடியே ஆகும். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள குடாநாட்டில் வெறும் 22 ஆயிரத்து 280 மக்களே வாக்களித்துள்ளனர். இவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 ஆயிரத்து 922 வாக்குகளே செல்லுபடியான வாக்குகள். இவற்றிலிருந்தே அரசின் 13 பெரும்பான்மை ஆசனங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைவிட 2600 வாக்குகள் மத்திரம் அதிகமாகப்பெற்றே அரசு கூட்டணி இந்த வெற்றியை பெற்றிருக்கிறது. இருப்பினும் குடாநாட்டில் அதிகவிருப்பு வாக்குகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த முதன்மை வேட்பாளர் முடியப்பு ரெமேடியஸ் பெற்றுள்ளார். சுயேட்சையாக போட்டியிட்ட ஆனந்த சங்கரி 424 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.

இதிலிருந்து வெளிப்படையாக புரிந்துகொள்ளக்கூடிய விடயம் என்னவெனில், குடாநாட்டில் வாக்களிக்க தகுதியான ஏனைய வாக்காளர்கள் வாக்களித்திருந்தால் தமிழத்தேசிய கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றிருக்கும் என்பதே ஆகும். ஏனெனில், வாக்களிக்க வருகைதராத மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதற்கு வந்தால் தமக்கு அரச படைகளாலும் துணைக்குழுவினராலும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தில் வாக்களிக்க வருகைதராமல் விட்டிருக்கலாம். ஏனெனில், கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தால் அவர்களால் தமக்கு அச்சுறுத்தல் என்ற முடிவுடன் வாக்காளர்கள் வாக்களிக்க வருகைதராமல் விட்டிருக்கலாம் என்பது சாத்தியமற்ற வாதம். இல்லாவிடில், குடாநாட்டை பொறுத்தவரை தேர்தல் எனப்படுவது மாற்றத்தை தீர்மானிக்கும் விடயம் அல்ல என்ற முடிவுடன் வாக்களிக்க வருகைதராமல் விட்டிருக்கலாம்.

இவ்வாறு வாக்காளர்களின் மனதில் எழுந்திருக்க கூடிய இரு முடிவுகளுமே அரசுக்கும் அதன் திட்டங்களுக்குமான எதிரானவையே ஆகும். தமிழ்த்தேசியத்துக்கான உறுதிமொழிக்காகவும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும் வாக்கு கேட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை தோற்கடித்து அந்த கட்சியின் கொள்கையை தேர்தல் ஊடாக அடையாளம் தெரியாமல் அழித்து ஒழித்து விடுவதன்மூலம், தமிழ்மக்கள் சிங்கள அரசின் கீழேயே வாழ விரும்புகிறார்கள் என்ற பிரசாரத்தை மேற்கொள்வதுதான் சிறிலங்கா அரசின் திட்டம். இந்த திட்டத்துக்கு குடாநாட்டு மக்கள் தக்க பதிலளித்துள்ளார்கள்.

வவுனியாவில் இதைவிட பெரிய வெற்றி என்று கூறுமளவுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அங்கு கிட்டத்தட்ட 50 சதவீதமான வாக்களர்கள் வாக்களித்தே இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. புளொட் 3 ஆசனங்களை பெற்றுள்ளது. ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்களும் அடாவடித்தனங்களும் மலிந்த வவுனியாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இவ்வாறு தெரிவு செய்வதற்கு மக்கள் இன்னமும் தெளிவுடனும் துணிவுடனும் இருக்கிறார்கள் என்றால் அது தமிழ்மக்களின் போராட்ட உணர்வின் உண்மையான வெளிப்பாடே ஆகும்.

இரு மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெற முன்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு என்னவகையான நிலைமை காணப்பட்டது என்பது யாவருக்கும் தெரிந்ததே.

போர் முடிவடைந்து தமிழரின்போராட்டம் இனி இல்லை என்ற அரசின் பிரசாரம் ஓங்கிய நிலையில் -


தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழரின் கொள்கைகள் செல்லுபடியாகாது என்ற கருத்துருவாக்கம் பரவலாக பரப்பிவிடப்பட்ட நிலையில் -

சிங்கள அரசிடம் தமிழ்மக்கள் தமது இலட்சியத்தை அடகுவைத்துவிட்டுத்தான் இனி பிழைக்கவேண்டும் என்ற பரப்புரை கொள்கையை விற்ற சில தமிழ்கட்சிகளாலேயே முன்மொழியப்பட்ட நிலையில்தான் -

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது இலட்சியத்தில் வழுவாது இந்த தேர்தல்களை எதிர்கொண்டது. மக்கள் அதற்கு சரியான ஆணையை வழங்கியிருக்கிறார்கள். மக்கள் வழங்கியிருப்பது தனியே ஆணை மாத்திரம் அல்ல.

தமிழர்களின் உரிமைப்போராட்டம் இன்னமும் உயிர்த்துடிப்புடன் உள்ளது என்பதை உறுதியாக கூறியிருக்கும் வரலாற்று தீர்ப்பு.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA