கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு 2009ஆம் ஆண்டின் சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான விருது வழங்கப்படுகின்றது.
ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு என்கின்ற சர்வதேச ஊடக அமைப்பு இந்த விருதை வழங்குகின்றது.
இவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறித்த அறிவித்தல் இம்மாதம் குறித்த ஊடக அமைப்பினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
இது அவரின் ஊடகப் பணிக்குக் கிடைக்கப் பெறுகின்ற மிகப் பெரிய கௌரவமாகும் என்றும் அந்த ஊடக அமைப்பு அறிவித்துள்ளது.
இதேநேரம் ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை இலங்கையில் நீதியும், நீதி நிர்வாகமும் இறந்துவிட்டன என்பதையே வெளிப்படுத்திக் காட்டுகின்றது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.