Thursday 20 August 2009

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் புதிய போக்கு

இந்தியாவின் இந்த புதிய போக்கினை தமிழர்தரப்பு எவ்வாறு கையாளப்போகிறது என்பதில்தான் ஈழவிடுதலைப்போராட்டத்தின் அடுத்த அங்கம் தங்கியிருக்கிறது.


ஈழத்தமிழரின் அரசியல் வாழ்வுரிமை தொடர்பில் இந்தியா புதிய போக்கொன்றைக் கடைப்பிடிக்கும் நோக்குடன் தனது இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் தனது புதிய நகர்வினை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எடுத்துக்கூறி அதன் ஊடாக புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களுக்கும் அந்த செய்தியை எடுத்துக்கூறும்படி இந்தியா கோரியிருப்பதாகவும் கொழும்பிலிருந்து பேசவல்ல சில தரப்புக்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் இல்லாத ஒரு வெற்றிடத்தில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தம்மால் இறங்கிவந்து பணிபுரிய முடியும் என்றும் ஈழத்தமிழர்களது போராட்டத்தை பிரபாகரனுக்கு முன், பிரபாகரனுக்கு பின் என்ற ரீதியில் தாம் அணுகவிரும்புவதாகவும் இன்றைய காலகட்டத்தில் தம்மை முழுமையாக நம்பலாம் என்றும் தமிழர்களின் அரசியல் விடிவுக்காக தாம் எந்தப் பணியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்தியா உயர்மட்டம் தமிழர் தரப்புக்கு எடுத்துக்கூறியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த மாத முற்பகுதியில் இந்தியா சென்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்திய உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்நிலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடத்தையும் சிங்கள தேசத்திடம் பேரம்பேசும் தளத்தை ஏற்படுத்தும்வகையில் தமிழர்கள் வசமிருந்த ஆயுதபலம் முற்றாக அழிந்துவிட்டதையும் இனி என்ன பாதையில் தீர்வை நோக்கி நகர்வது என்பது குறித்தும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியத் தலைவர்களிடம் பேசினர்.

தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படைக்கோட்பாடுகளை விட்டு ஈழத்தமிழர்கள் என்றுமே கீழிறங்கப்போவதில்லை என்றும் இணைந்த வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகமாக இருக்கின்றபோது அதனை சிங்கள தேசம் பிரித்து வைத்திருப்பதையும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இந்தியத் தரப்பினரிடம் விரிவாக எடுத்துக்கூறியிருந்தார். தமிழ்மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அரசியல் உரிமைகள் என்பவை அடங்கிய விரிவான வரைவு ஒன்றைத் தயார் செய்து கூட்டமைப்பினர் இந்தியத் தரப்பிடம் கையளித்திருந்தனர்.

இது தொடர்பாக பரிசீலித்த இந்திய அரசின் உயர்மட்டத்தினர், வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து சிறிலங்கா அரச அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தமது நாட்டின் உயர் நீதிமன்றம் வழங்கிய வடக்கு கிழக்கு பிரிக்கப்படவேண்டும் என்ற தீர்ப்பை தன்னால் மீற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், தமிழ்மக்களுக்கான இறுதி அரசியல் தீர்வு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்த - முன்னர் வழங்கிய வரைவுடன் கூடிய விடயங்களை உள்ளடக்கிய - வரைவை இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசி அவரிடம் கையளிக்கவேண்டும் என்று கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டபோது, இந்தியப் பிரதமரைச் சந்திப்பது இப்போதைக்கு கடினம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, யாழப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டத் தேர்தல்களுக்குப் பின்னர் மீண்டும் இந்தியா செல்வது என்ற முடிவோடு கூட்டமைப்பினர் நாடு திரும்பினர்.

(இந்தியப் பிரதமர் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்றிருந்தபோது அவரை கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர். அப்போது இந்தியப் பிரதமரிடம் பல்வேறு விடயங்களை எடுத்துக்கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பநதன், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகர் நாராயணனுடனான சந்திப்பில், இந்தியாவின் போக்குக் குறித்து காரசாரமாக விமர்சித்திருந்தார். பிரதமருடனான சந்திப்புக்கு உடனடியாக சம்மதம் தெரிவிக்காததற்கு இதுவும் ஒரு காரணம்.)

கூட்டமைப்பினரின் வரைவு தொடர்பாக விரிவான பரிசீலனையை மேற்கொள்ளும் பொறுப்பை இந்தியாவின் புதிய வெளிவிவகார செயலராக பதவியேற்றிருக்கும் நிருபமா ராவிடம் இந்திய உயர்மட்டம் வழங்கியிருந்தது. சீனாவுக்கான தூதுவராக பணியாற்றிய நிருபமா ராவ் கடந்த மாதம் இந்தியாவின் வெளிவிவகாரச் செயலராக பதவியேற்றிருக்கிறார். சிறிலங்காவில் முன்னர் தூதுவராக கடமையாற்றியவர் மட்டுமல்லாமல் சீனாவிலும் கடமையாற்றித் திரும்பியுள்ளவர் என்ற ரீதியில் நிருபமா ராவ் அவர்கள் இந்த விடயத்தை ஆழமாகப் பரிசீலித்து இந்தியாவின் நலனுக்கு ஏற்றவகையில் பிரதமருக்குக் தக்க ஆலோசனை வழங்குவார் என்று இந்திய உயர்மட்டம் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் புதிய நிலைப்பாடு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குத் தெரிவிக்கப்பட்டு அதன் ஊடாக புலம்பெயர்ந்துவாழும் தமிழர் தரப்போடும் இது தொடர்பில் ஆலோசனைகளைக் கேட்குமாறு இந்தியத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பேச்சு நடத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தற்போது லண்டன் விரைந்திருப்பதுடன் அங்கு, நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு தாம் எடுத்துள்ள முடிவுகளை அவர்களுடன் கலந்தாலோசித்திருப்பதாகவும் தெரிகிறது.



இந்தியாவின் ஊடாக தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வினைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்காக இந்தியாவின் முயற்சிகளுக்கும் ஆக்கபூர்வமான பணிகளுக்கு ஆதரவையும் அனுசரணையையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ்மக்களுக்கு எப்போதும் இருக்கின்றபோதும் விடுதலைப்புலிகளை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வு கொடுக்கவேண்டும் என்ற இந்தியாவின் நழுவல் போக்கிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறவே உடன்படவில்லை.

தமது இந்த நிலைப்பாடு இந்தியாவிற்கு தெரியும் என்றாலும் நடைபெறப்போகின்ற அடுத்த சந்திப்பில் இந்தியத் தரப்பினருக்கு தாம் தெளிவாக எடுத்துக்கூறவிருப்பதாக கூட்டமைப்பின் உயர்மட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.
"ஈழவிடுதலைப்போராட்டத்தின் ஓர் அங்கமான ஆயுதப்போராட்டத்தை சிறிலங்கா அரசுடன் சேர்ந்து அழித்தொழித்த இந்தியா, விடுதலைப்புலிகள் என்ற தமிழ்மக்களின் ஆன்மாவையே அழித்துவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தேசிய இனமொன்றின் விடுதலைக்காகப் போராடி அவர்களின் உரிமைகளுக்காக முப்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் உயிர்களைத் தியாகம் செய்த தமிழர் சேனையின் அந்த ஒப்பற்ற தியாகத்தை, பிரபாகரனுக்கு முன் பிரபாகரனுக்கு பின் என்ற குறுகிய வாய்பாட்டிற்குள் அடக்கிவிடமுடியாது. அடக்கவும் கூடாது.

" நடந்து முடிந்த யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா தேர்தல்களில் தமிழ்மக்களின் கொள்கையை முன்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருக்கிறது என்றால், மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமல்ல விடுதலைப்புலிகளுக்குமான தமது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள் என்றே அர்த்தம். தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கோ விடுதலைப்புலிகளுக்கோ தனித்தனியே வேறுபாடான எந்தக் கொள்கையும் கிடையாது. இரண்டு அமைப்புக்களுமே தமிழர்களின் கொள்கைகளை முன்னெடுத்து வந்தவையே ஆகும்." - என்று இந்தியாவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்துக்கூறும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதுஇவ்வாறிருக்க இந்தியா திடீரென தமிழ்மக்கள் பக்கம் தனது பார்வையைச் செலுத்தக் காரணம் என்ன என்று கேட்டபோது -

"விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்ற விடயத்தில் இந்தியாவைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திய சிறிலங்கா, தற்போது சீனாவின் ஆதரவுடன் கூடிய அரசியல் நிகழச்சிநிரலின்படி தனது காரியங்களை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. தமிழ்மக்களுக்கு என்ன கொடுத்தாலும் அது தான் நினைத்த தீர்வாகவே அமையவேண்டும் என்ற மிதப்பில் உள்ள மகிந்தவுக்கு ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தம் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், இந்தியாவின் பிரசன்னத்தை சிறிலங்காவினால் துடைத்தெறியவேண்டும் என்ற கட்டுக்கடங்காத கோபத்தில் மகிந்த அரசு, இந்தியாவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே பல வேலைகளில் இறங்கியிருக்கிறது. இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்தும் தாக்கியது, கிழக்கில் பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்துவந்த இந்திய வியாபாரிகளை அனுமதியின்றி வாணிபம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்து வெளியேற்றியமை போன்றவை இதற்குச் சில உதாரணங்களாகும். கிழக்கிலே இதுவரை காலமும் நடந்துவந்த ”துணிவியாபாரம்” இப்போது கசக்கத் தொடங்கியிருப்பது ஏன் என்பது பல வினாக்களுக்கான விடைகளைத் தரக்கூடும்.

"சிங்களதேசத்தின் இந்தத் திமிரை அடக்குவதற்கு எண்பதுகளைப் போல மீண்டும் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையில் தூக்கியுள்ளது இந்தியா. கடந்ததடவை ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கையைச் சுட்டுக்கொண்டதால், இம்முறை அரசியல் ரீதியில் காய்களை நகர்த்துவதற்குத் திட்டம் தீட்டிக் களமிறங்கியுள்ளது. கள யதார்த்தத்தை வைத்துப்பார்த்தால் நடைபெற்றுக்கொண்டிருப்பது இதுதான்" - என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை சிறிலங்கா இவ்வாறு எடுத்தெறிந்து நடக்கப்போகிறது என்று இந்தியாவுக்கு முன்னரே தெரிந்திருக்க போதிய வாய்ப்புக்கள் இருந்தனவே, ஏன் அப்போது எல்லாம் கூடிக்குலாவி நட்பு பாராட்டிவிட்டு இப்போது முறுகிக்கொள்கிறது என்று கேட்டதற்கு -


"சிறிலங்கா இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எதிர்காலத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும் தன்னை தூக்கியெறிந்துவிட்டு சீனாவின் பக்கம் சாய்ந்துகொள்ளும் என்றும் சிறிலங்காவுக்கும் புலிகளுக்கும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே இந்தியாவுக்கு தெரியும். ஆனால், இந்தியா இரண்டு விடயங்களில் அவதானமாக செயற்பட்டது. அதாவது,

மேற்குலகம் முண்டுகொடுப்பது போல தென்படும் விடுதலைப்புலிகளை அழித்துவிடுவதில் சிறிலங்காவுக்கு எப்படியாவது ஆதரவளிப்பது.

மற்றையது, அவ்வாறான போர் இடம்பெறும்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்புக்கு செவிசாய்த்து - தனது நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின் மக்கள் புரட்சியால் - மத்திய அரசு பயந்து தனது முடிவை மாற்றிக்கொண்டது என்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பது.

"சீனா, சிறிலங்கா பிரச்சினை வெளிவிவகார விடயங்கள். ஆனால், விடுதலைப்புலிகள், தமிழ்நாடு ஆகியவை இந்தியாவை பொறுத்தவரை உள்நாட்டு விவகாரங்கள். ஆகவே, வெளிவிவகாரத்தைவிட உள்விவகாரத்தை நிதானமாக கையாளவேண்டும் என்பதில் இந்தியா உன்னிப்புடன் செயற்பட்டது. இந்த முடிவிற்கு முன்னால் எத்தனை ஆயிரம் மக்களின் பேரழிவு ஏற்பட்டாலும் தனது நிலைப்பாட்டில் மாறுவதில்லை என்ற உறுதியுடனேயே இந்தியா செயற்பட்டது." - என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்தியாவின் இந்த புதிய போக்கினை தமிழர்தரப்பு எவ்வாறு கையாளப்போகிறது என்பதில்தான் ஈழவிடுதலைப்போராட்டத்தின் அடுத்த அங்கம் தங்கியிருக்கிறது. ஏனெனில், இந்தியா எனப்படுவது தமிழர்களின் போராட்டத்தில் பிரிக்கமுடியாத அங்கம். ஆனால், அதற்காக இந்தியாவின் நலனுக்காக தமிழினத்தின் ஒட்டுமொத்த இலட்சியத்தையும் அடகுவைத்துவிட்டு விடுதலையைப் பெற்றுவிடமுடியாது. அவ்வாறு தமிழினம் செய்யத்தலைப்படுமாயின்,

தமிழினம் தோல்வியின் பாதையிலேயே பயணப்படுவதாய் அர்த்தப்படும். ஆகவே, இந்தியாவினூடாக சாதுரியமாகக் காய்களை நகர்த்தி அதன் ஆதரவை எவ்வாறு தமிழினம் முழுமையாகப் பெற்றுக்கொள்வது அல்லது அதன் ஆதரவை தமிழினம் எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்பதில்தான் தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA